தமிழக செய்திகள்

த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் நாளை தாக்கல் - மகளிருக்கு ரூ.2,500 அறிவிப்பு வெளியாகுமா?

பட்ஜெட் மீதான எம்.எல்.ஏ.க்களின் விவாதங்கள் 10-ந் தேதி தொடங்கும்.

தமிழ்நாடு சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது.

த.வெ.க. அரசின் பட்ஜெட்

கடந்த தி.மு.க. ஆட்சியில் சட்டசபை தேர்தலுக்கு முன்பு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதன் பிறகு நடந்த 17-வது சட்டசபை தேர்தலில் த.வெ.க. கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட், சட்டசபையில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கான அறிவிப்பை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கடந்த மாதம் 21-ந்தேதி அறிவித்தார்.

நிதி அமைச்சர் மரிய வில்சன்

அதன்படி சட்டசபை நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது. அப்போது 2026-2027-ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்கிறார். நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்கிறார்.

எத்தனை நாள் நடைபெறும்?

நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும். அப்போது பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது உள்பட முக்கிய முடிவுகள், அந்த கூட்டத்தில் எடுக்கப்படும்.

பட்ஜெட் மீதான எம்.எல்.ஏ.க்களின் விவாதங்கள் 10-ந் தேதி தொடங்கும். அதன் நிறைவில் நிதி அமைச்சர் பதிலளித்து பேசுவார். அதன் பின்னர் இடைவெளி இல்லாமல் அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கைகளும் தாக்கலாகி, விவாதத்துக்கு விடப்படும் என்றும், எனவே இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 2-ம் வாரம் வரை நீடிக்கலாம் என்றும் தெரிகிறது.

முதலமைச்சர் விஜய்

த.வெ.க. அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது என்பதால், அனைத்துத்துறை அமைச்சர்கள், செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் துறைவாரியாக முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் திட்டம்

த.வெ.க. சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற வாக்குறுதிகளான ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் 60 வயது வரை ரூ.2,500 என்ற மதிப்புமிகு மகளிர் திட்டம், ஆண்டுக்கு 6 இலவச கியாஸ் சிலிண்டர், வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை, அனைத்து அரசு பஸ்களிலும் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்டவற்றில் எவையெல்லாம் இந்த பட்ஜெட்டில் திட்டங்களாக அறிவிக்கப்பட உள்ளது? என்ற பலத்த எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

மேகதாது அணை பிரச்சனை

அதே நேரம் காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனை, மேகதாது அணை பிரச்சனை, மின்வெட்டு, அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் என பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. எனவே அனல்பறக்கும் விவாதங்கள், இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், முக்கிய சட்டத்திருத்த மசோதாக்கள், அரசினர் தீர்மானங்கள், அவை விதி 110-ன் கீழ் முதலமைச்சரின் அறிவிப்புகள் போன்றவற்றையும் இந்த கூட்டத்தொடரில் எதிர்பார்க்கலாம். கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜய் தனது கையை வீசி செய்கை செய்ததில் எந்த தவறும் இல்லை என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறியுள்ள நிலையில், அதுவும் இந்த தொடரில் எதிரொலிக்கலாம் என்று தெரிகிறது.