சட்டசபை தேர்தலையொட்டி த.வெ.க. தலைவர் விஜய் இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டு இருந்தார்.
பெரம்பூர் தொகுதியில் இருந்து அவர் பிரசாரம் செய்ய முடிவு செய்திருந்தார். பெரம்பூர் முல்லை நகரில் இருந்து பிரசாரத்தை தொடங்க தேர்தல் ஆணையத்தில் அனுமதி கோரப்பட்டது.
ஆனால் விஜய் பிரசாரத்துக்கு தேர்தல் ஆணையம் அனுமதி கொடுக்கவில்லை. விஜய் அனுமதி கேட்ட இடத்தில் சாலையில் பள்ளம் தோண்டி பணிகள் நடக்கிறது. மேலும் அந்த இடம் இரும்பு தடுப்புகளால் அடைக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், ‘பிரசாரத்தை தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன்பே அனுமதி கோரிய நிலையில், ஒரு நாளுக்கு முன்பு அந்த இடத்தில் மாநகராட்சி சார்பில் சாலையில் பள்ளம் தோண்டி இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் பள்ளமும், இரும்பு தடுப்புகளும் எங்கிருந்து வந்தது?’ என்று குற்றம்சாட்டி இருந்தார்.
இதற்கு சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்து உள்ளது. ‘அந்த இடத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் அதை சரி செய்ய குடிநீர் வாரியம் சார்பில் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்றது. அந்த பணிகளும் முடிந்து விட்டது. எனவே அனுமதி மறுக்கப்பட்டதற்கு அது காரணம் இல்லை. உண்மையான காரணம் தேர்தல் நடத்தும் அலுவலரின் ஆணையில் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது’ என்று கூறியுள்ளது.
இதற்கிடையே விஜய் பிரசாரம் செய்ய அனுமதி கேட்டிருந்த முல்லை நகர் பகுதி தெருமுனை கூட்டம் நடத்துவதற்கு மட்டுமே உகந்த இடம். ஆனால் விஜய் பிரசார கூட்டத்தில் 3 ஆயிரம் பேர் கூடுவார்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்ததால் அனுமதி கொடுக்கவில்லை. அதற்கு பதிலாக வேறு ஒரு இடத்தை தேர்வு செய்யுமாறு தேர்தல் அதிகாரி தரப்பில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து விஜய் பிரசாரத்தை தொடங்குவதற்காக பெரம்பூர் தொகுதியில் வேறு இடத்தில் அனுமதி கேட்டு தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த முறை தெருமுனை கூட்டத்துக்கே அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் (30-ந்தேதி) தொடங்க உள்ளது. த.வெ.க. வேட்பாளர்கள் நாளை அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிடுகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகிறது.
இதையடுத்து 234 தொகுதிகளிலும் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர்கள் நாளை மறுநாள் (30-ந்தேதி) வேட்பு மனுதாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர். பெரம்பூர் தொகுதியில் விஜய் மனு தாக்கல் செய்கிறார்.
மேலும் விஜய் பிரசாரத்துக்கு தேர்தல் ஆணையம் அனுமதி கொடுக்கும் நிலையில் வருகிற 30-ந்தேதி பெரம்பூரில் இருந்து விஜய் பிரசாரத்தை தொடங்கவும் திட்டமிட்டுள்ளார்.