தாராபுரத்தில் காலை முதலே குவிந்த தொண்டர்கள் 
தமிழக செய்திகள்

தாராபுரத்தில் காலை முதலே குவிந்த தொண்டர்கள்: 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு- டிரோன்கள் பறக்க தடை

கியூ.ஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5000 பேர் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.

திருப்பூர் தாராபுரம் இடைத்தேர்தல் சூடுபிடித்த நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டத்துக்காக காலை முதலே ஆயிரக்கணக்கான தொண்டர்கள், ரசிகர்கள் குவிந்துள்ளனர். 5 முனைப் போட்டி சூழலில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு 5000 பேருக்கு மட்டுமே கியூ.ஆர். குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

​திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளுக்கு இன்னும் வெறும் 6 நாட்களே எஞ்சியிருப்பதால் தொகுதியில் தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது.

5 முனை போட்டி

இத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம், தி.மு.க, அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய 5 முக்கிய அரசியல் கட்சிகளும் நேரடியாகக் களமிறங்கியுள்ளதால், தொகுதியில் கடுமையான 5 முனைப் போட்டி நிலவுகிறது. தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை எப்படியாவது வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கில், அனைத்து முன்னணி அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்களும், முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் தாராபுரத்தில் முகாமிட்டுத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

​தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் பி. சத்தியபாமாவை ஆதரித்து கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கிராமம் கிராமமாகச் சென்று விசில் சின்னத்திற்குத் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். அதேபோல் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோர் தாராபுரத்தில் முகாமிட்டுப் பிரம்மாண்ட பிரசாரங்களை மேற்கொண்டதோடு, கட்சியின் மூத்த தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களும் வீதி வீதியாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

தலைவர்கள் பிரசாரம்

அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் வருகை தந்து திறந்தவெளி வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த ஒரு வார காலமாகத் தாராபுரத்திலேயே முகாமிட்டுத் தெருமுனை கூட்டங்கள் மூலம் தீவிர பிரசாரம் செய்தார். இதேபோல கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர்களும் இடதுசாரி அமைப்புகளின் தொண்டர்களும் தாராபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமப்புறப் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

​இத்தகைய பரபரப்பான சூழலுக்கு நடுவே, த.வெ.க. வேட்பாளர் பி. சத்தியபாமாவை ஆதரித்துத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று மாலை 3 மணி அளவில் நடைபெறும் பிரம்மாண்ட பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

விஜய் வருகை

இதற்காக இன்று மதியம் 2 மணிக்குச் சிறப்பு விமானம் மூலம் கோவை வந்தடையும் அவர், அங்கிருந்து புறப்பட்டுச் சூலூர், குண்டடம், ஊதியூர் சாலை வழியாகத் தாராபுரம் - உடுமலையில் உள்ள கொண்டரசம்பாளையம் மாருதி நகரில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள மைதானத்தைச் சென்றடைகிறார்.

தலைவர் விஜய்யின் வருகையை முன்னிட்டு அவர் பயணிக்கும் சாலை மார்க்கப் பகுதிகள் முழுவதும் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் மாருதி நகர் மைதானமும் காவல்துறையின் முழுமையான பாதுகாப்புக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

​தொண்டர்கள் குவிந்தனர்

இன்று மாலை 3 மணிக்கு பொதுக்கூட்டம் தொடங்க உள்ள நிலையில், காலை முதலே திருப்பூர், ஈரோடு, கோவை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான த.வெ.க தொண்டர்களும் ரசிகர்களும் தாராபுரத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாகப் பெண் தொண்டர்கள் அதிக அளவில் வருகை தந்ததால், அமைப்பாளர்கள் அவர்களுக்கு முன்னுரிமை அளித்து மேடைக்கு அருகே ஒதுக்கப்பட்ட சிறப்பு அரங்கிற்குள் அமர வைத்துள்ளனர்.

அவர்களுக்குத் தேவையான குடிநீர், தின்பண்டங்கள் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக கியூ.ஆர் கோடு அனுமதிச் சீட்டு வைத்திருக்கும் நபர்கள் மட்டுமே முக்கிய மேடை அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்ற போதிலும், அனுமதிச் சீட்டு இல்லாத பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் தாராபுரம் - உடுமலைச் சாலையிலும், தலைவர் விஜய் வருகை தரும் அனைத்துப் பாதைகளிலும் திரண்டு நின்று வழிநெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கக் காத்திருக்கின்றனர்.

கியூ.ஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.

கியூ.ஆர்.கோடு பாஸ்

கியூ.ஆர்.குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம்.

குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி, சமூக வலைத்தள நேரலைகளில் கண்டு, கியூ.ஆர். குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு பொதுச்செயலாளர் அமைச்சர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

விழாக்கோலம்

தாராபுரமே விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், இன்றைய பிரசாரப் பொதுக்கூட்டம் இடைத்தேர்தல் களத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3000 போலீசார் பாதுகாப்பு

பொதுக்கூட்டத்துக்கு தமிழக முதலமைச்சர் விஜய் வருகையையொட்டி தாராபுரம் மற்றும் அவர் வரும் பாதைகள் அனைத்தும் போலீஸ் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு முன் ஏற்பாடுகளை கோவை போலீஸ் ஐஜி ரம்யா பாரதி தலைமையில் டிஐஜி சாமிநாதன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிருஷ்டி சிங், திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

SCROLL FOR NEXT