மணலி மண்டல குழு கூட்டம் தலைவர் ஏ.வி.ஆறுமுகம் தலைமையில் இன்று தொடங்கியது. உதவி ஆணையர் பத்மநாபன் முன்னிலை வகித்தார்.
கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது த.வெ.க.வை சேர்ந்த திருவொற்றியூர் எம்.எல்.ஏ. செந்தில்குமார், பொன்னேரி எம்.எல்.ஏ. டாக்டர் ரவி ஆகியோர் வந்தனர். அப்போது முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தை எப்படி கூட்ட அரங்கில் வைக்கலாம் என்று திருவெற்றியூர் எம்.எல்.ஏ. செந்தில்குமார் கேள்வி எழுப்பினார்.
அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் உறுப்பினர் தீர்த்தி, புதிதாக அ.தி.மு.க.வில் இருந்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த முல்லை ராஜேஷ் ஆகியோரும் பேசினர். இதற்கு தி.மு.க.உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து மண்டல குழு தலைவர் ஏ.வி. ஆறுமுகம் பேசும் போது, “மக்கள் பிரச்சனை பற்றி பேச நாங்கள் கூறி உள்ளோம். போட்டோ பிரச்சனை அல்ல” எனக்கூறி இன்னொரு நாள் கூட்டத்தை வைத்துக் கொள்கிறேன் என்று தெரிவித்து கூட்டத்தை ரத்து செய்து விட்டு வெளியேறினார். அவரை தொடர்ந்து தி.மு.க., அ.தி.மு.க. உறுப்பினர்களும் வெளியேறினர்.
உறுப்பினர்கள் இல்லாததால் கூட்டத்தில் தீர்மானங்களை இயற்ற முடியாது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக எம்.எல்.ஏ.க்கள் ரவியும், செந்தில் குமாரும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
இதுகுறித்து மண்டலகுழு தலைவர் ஆறுமுகம் கூறும் போது, மக்கள் பிரச்சனை பேசுவதற்காக கூட்டம் கூடினோம். ஆனால் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்திற்கு தனது ஆதரவாளர்களை உள்ளே கூட்டி வந்தார், மேலும் அனைவரையும் ஒருமையில் பேசினார்.
இதனால் இன்னொரு நாள் கூட்டத்தை வைத்துக் கொள்கிறேன் என கூறி ரத்து செய்துவிட்டு வெளியேறி விட்டேன்.வேறொரு நாளில் கூட்டம் நடைபெறும். மக்கள் பிரச்சனைகளை நாங்கள் தீர்ப்போம் என்றார்.