டி.டி.வி. தினகரன் 
தமிழக செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பாணையைத் திருத்தி வெளியிட வேண்டும்- டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்

தமிழக அரசில் 6,574 பணியிடங்களை நிரப்புவதற்கு மட்டும் அறிவிப்பாணையை வெளியிட்டிருப்பது, கடல் அளவு தேவைக்கு கடுகளவு உதவுவது போல அமைந்துள்ளது.

தமிழ்நாடு அரசுத் துறைகளில் நிலவும் காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்பிடும் வகையிலும், தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிடும் வகையிலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருக்கும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பைத் திருத்தி, அதிகப்படியான காலிப்பணியிடங்களுடன் கூடிய புதிய அறிவிப்பாணையை வெளியிட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துவதாக டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடும் அதிருப்தி

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வரி வசூலிப்போர் உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள 46 வகையிலான பணிகளுக்கு 6,574 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் சுமார் 15 லட்சம் தேர்வர்கள் எதிர்கொள்ள வாய்ப்பிருக்கும் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கு வெறும் 6,574 காலிப்பணியிடங்களை அறிவித்திருப்பது, அரசுப் பணி கனவில் அத்தேர்வை நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இரவு பகலாகத் தயாராகிக் கொண்டிருக்கும் தேர்வர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அரசுத் துறைகளில் நிலவும் அனைத்து காலிப்பணியிடங்களும் விரைந்து நிரப்பப்படும் என வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த தவெக, லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள் நிலவும் தமிழக அரசில் 6,574 பணியிடங்களை நிரப்புவதற்கு மட்டும் அறிவிப்பாணையை வெளியிட்டிருப்பது, கடல் அளவு தேவைக்கு கடுகளவு உதவுவது போல அமைந்துள்ளது.

கடும் கண்டனம்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு 4 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, கிராம மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் 5 லட்சம் இளைஞர்களுக்கு நிரந்தரப் பணி என வேலைவாய்ப்பு சம்பந்தமாக தவெக கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்ற தற்போதுவரை நடவடிக்கை எடுக்காத நிலையில், டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கான பணியிடங்களையும் சொற்ப அளவிற்கு குறைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, தமிழ்நாடு அரசுத் துறைகளில் நிலவும் காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்பிடும் வகையிலும், தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிடும் வகையிலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருக்கும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பைத் திருத்தி, அதிகப்படியான காலிப்பணியிடங்களுடன் கூடிய புதிய அறிவிப்பாணையை வெளியிட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.

SCROLL FOR NEXT