துறையூர் தொகுதி துணை சபாநாயகர் ரவி சங்கர், தண்ணீர் பிரச்சனை குறித்து புகார் அளிக்க வந்த நபரை தாக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பை கிளப்பியது. தினகரன், மக்கள் பிரநிதிகள் மக்களுக்காக செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த சில மாதங்களாக நிலவும் தண்ணீர் பிரச்சனை குறித்து புகார் அளிக்க வந்த நபரை, தகாத வார்த்தைகளை பயன்படுத்தி தரக்குறைவாக பேசியதோடு, அந்த நபர் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியிருக்கும் துறையூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற துணை சபாநாயகருமான ரவிசங்கர் அவர்களின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
தன்னை சந்திக்க வந்த நபரை துணை சபாநாயகர் அடித்து விரட்டிய வீடியோவும், அங்கு நடைபெற்ற சம்பவங்கள் குறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் எதிர்ப்பு கிளம்பிய பின்னர், அவரை வைத்து விளக்க வீடியோ வெளியிட்டிருப்பது வேடிக்கையின் உச்சம்.
விஜய்க்காக ஓட்டு போட்டவன் என பலமுறை பாதிக்கப்பட்ட நபர் சொன்ன பின்பும், அவரை ரவி சங்கர் அவர்கள் கண்மூடித்தனமாக தாக்கியிருப்பதை பார்க்கும் போது அவருக்கு கோபம் தனக்கு வாக்களித்தவர் மீதா? அல்லது ஏதோ தனது ஆசையை விஜய் அவர்கள் நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவதால் அவர் மீது ஏற்பட்ட கோபமா? என்ற சந்தேகமே எழுகிறது.
மக்களோடு மக்களாக நிற்பவர்களைத் தான் வேட்பாளர்களாக தானே தேர்ந்தெடுத்திருப்பதாக வேட்பாளர்களின் அறிமுகக்கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய் அவர்கள், அவர் தேர்ந்தெடுத்த லட்சணம் இது தான் என்பதை இப்போதாவது புரிந்து கொள்வாரா?
எனவே, தொகுதி பிரச்சனையை கூற வந்த நபரை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்குதல் நடத்திய துணை சபாநாயகர் ரவி சங்கர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, மக்கள் பிரநிதிநிதிகள் ஆளப்பிறந்தவர்கள் அல்ல மக்களுக்காக பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும் என இந்நேரத்தில் வலியுறுத்துகிறேன்.