காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியேத் தீருவோம் என கங்கணம் கட்டியிருக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்தின் செயல்பாடுகளை தடுத்து நிறுத்தாமல், இனியும் அமைதி காத்தால், அது தவெக அரசு தமிழக மக்களுக்கு இழைக்கும் வரலாற்றுத் துரோகம் என்பதை உணர்ந்து, உடனடியாக சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் கர்நாடக அரசின் சதி திட்டத்தை முறியடிக்க வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்துவதாக டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை மாநகருக்கான கிருஷ்ணா நீரை கூடுதலாக விடுவிப்பது குறித்து ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், தவெக ஆட்சி அமைந்தது முதலே நீரில்லாமல் பாலைவனமாக மாறிக்கொண்டிருக்கும் விளை நிலங்களால் வாழ்வாதாரத்தை இழந்து நிர்கதியாக நிற்கும் காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கான காவிரி நீரை பெறுவது குறித்து இதுவரை வாய் திறந்துள்ளாரா?
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கான நீரை வழங்காமல் தொடர்ந்து வஞ்சித்து வருவதோடு, தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் வகையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியே தீருவோம் என பிடிவாதம் பிடித்து அதனை கட்டுவதற்கான பணிகளையும் தொடங்கியிருக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசின் சட்ட விரோத போக்கிற்கு எதிராக தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் இதுவரை ஒரு கண்டனமாவது தெரிவித்திருக்கிறாரா?
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் கர்நாடகத்திற்கு சென்று அங்குள்ள முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அவர்களை நேரில் சந்தித்து பேசுவதில் தான் சிக்கல் என்றால், கடந்த வாரம் நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திற்கே நேரடியாக வந்து விருந்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி அவர்களிடம் காவிரி குறித்து ஒரு வார்த்தையாவது பேசினாரா?
மைனாரிட்டி தவெக அரசின் நாற்காலியின் ஒரு காலாக தாங்கி நிற்கும் காங்கிரசுக்கு கைமாறாக காவிரி டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பலிகொடுக்க தமிழக முதல்வர் ஜோசப் விஜய் முடிவெடுத்துவிட்டாரா? தமிழகத்தின் உரிமைகளையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் விட ஆட்சி அதிகாரம் தான் முக்கியமாகிவிட்டதா? அரசியல் லாபத்திற்காக மாநிலத்தின் உரிமையை அடகு வைப்பது விவசாயிகளுக்கு இழைக்கும் துரோகமாக தெரியவில்லையா? காவிரி நமது உயிர்நாடி என்று சட்டமன்றத்தில் பேசிய வசனமெல்லாம் வெறும் Reel's -க்காக மட்டுமா ? என விவசாய பெருமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்கள் பெருந்தன்மையோடு தமிழகத்தின் தேவையை உணர்ந்து கூடுதல் நீர் திறந்து விட ஒப்புக் கொள்ளும் போது, தவெக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் ஆளும் கர்நாடகம் மட்டும் தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமான காவிரி நீரை திறந்துவிட மறுப்பதின் மூலம், அரசியலை விட மக்கள் நலனே பிரதானம் என நினைப்பது எந்த கூட்டணி என்பதை மக்கள் நன்கு உணரத் தொடங்கிவிட்டனர்.
எனவே, காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியேத் தீருவோம் என கங்கணம் கட்டியிருக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்தின் செயல்பாடுகளை தடுத்து நிறுத்தாமல், இனியும் அமைதி காத்தால், அது தவெக அரசு தமிழக மக்களுக்கு இழைக்கும் வரலாற்றுத் துரோகம் என்பதை உணர்ந்து, உடனடியாக சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் கர்நாடக அரசின் சதி திட்டத்தை முறியடிக்க வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.