மதுரையில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கரூர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் கூறியது உண்மை தானா? என்பதை சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. அதில் எல்லாம் வெளிப்படும்.
கரூர் துயர சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் அரசு பணி வழங்கியது கடை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் கதையாக இருக்கிறது.
சினிமா கவர்ச்சி என்று யாராவது சொன்னால் முதல்வர் வருத்தப்படுகிறார், கோபப்படுகிறார். அவரது உடல் மொழியை பார்க்கும் போது சூட்டிங் பார்க்கிற அனுபவம் தான் ஏற்படுகிறது என எல்லோரும் சொல்கிறார்கள். எதிர்கட்சிகளை பார்த்து தீய சக்தி, தீர்ந்து போன சக்தி என சினிமாவில் உணர்ச்சி வசப்பட்டு பேசுவது போல் பேசுகிறார்.
கரூர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் கருப்பு சட்டை அணிந்து வந்தார். ஆனால் அவரது பேச்சிலும், உடல் மொழியிலும் எந்த துக்கமும் வெளிப்படவில்லை. அமைச்சர் நிர்மல் குமார் அரசியலை விட்டு செல்லுங்கள் என்று கூறி வருகிறார்.
தமிழக மக்கள் யாரை வெளியேற்ற வேண்டுமோ அவர்களை உறுதியாக வெளியேற்றுவார்கள். அமைச்சரின் பேச்சு, அகம்பாவம், ஆணவத்தை தான் காட்டுகிறது. திரைத்துறையில் பிரபலமாக இருந்ததால் தான் முதலமைச்சர் விஜய் ஆட்சிக்கு வந்துள்ளார் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
தி.மு.க. கூட்டணியில் வெற்றி பெற்ற கட்சிகளை வைத்து ஆட்சி அமைத்து உள்ளார். தற்போதுள்ள காங்கிரஸ் கட்சி மட்டுமல்ல கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்தியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெற்றி பெற்றவர்கள். ஜனாதிபதி ஆட்சி வந்துவிட கூடாது என்பதற்காக த.வெ.க.வுக்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க. சேர்ந்து ஆட்சி அமைக்க இருந்தார்கள் என்றும், இருவரும் கூட்டு களவாணிகள் என்கிறார். நீங்கள் செய்திருப்பது களவாணி வேலைதான். தி.மு.க. கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவை பெற்று அமைச்சரவையில் இடம் கொடுத்து ஆட்சி அமைத்திருக்கிறீர்கள். 6 எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்ததும் களவாணித்தனம் தான்.
டாக்லெஸ் ஒர்க் மோர் என்று அவரைப் பார்த்து நாம் சொல்ல வேண்டும். ரீல் விடுவதை நிறுத்துங்கள். ரீல் விட்டு ஆட்சிக்கு வந்தீர்கள். தமிழ்நாட்டு மக்கள் அவர்கள் எல்லோரையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். உங்களை விட பெரிய ஜாம்பவான்களே பார்த்தவர்கள் தான் தமிழ்நாட்டு மக்கள்.
பா.ஜ.க.வை எதிர்க்க வேண்டும் என்பதற்காக த.வெ.க.-தி.மு.க. ஒரே அணியில் இருக்க வேண்டும் என்பதை அரசியல் அறிக்கையாக பார்க்கிறேன். அதே போன்று தான் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் இணைந்து செயல்பட வாய்ப்பு இருக்கிறதா? என்று கேட்டால் அரசியல் சூழல் யாரை வேண்டுமானாலும் ஒன்று சேர்க்கும்.
கடந்த காலங்களில் அண்ணாவும், ராஜாஜியும் ஒன்றாக சேர்ந்திருக்கிறார்கள். இது போன்ற பல முன் உதாரணங்கள் உள்ளது. இது நடக்குமா? நடக்க கூடாதா? என தெரியாது. தி.மு.க. கூட்டணியை ஜெயித்தவர்களை தன் பக்கம் இழுத்து த.வெ.க. ஆட்சி அமைத்தது நியாயம் என்றால் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியும் நியாயம் தான்.
த.வெ.க.வை வீழ்த்த தி.மு.க., அ.தி.மு.க. இணைந்து வியூகம் அமைப்பதில் தவறில்லை. ஆனால் அரசியல் சூழல் தான் இதை முடிவு செய்யும்.
விஜயகாந்தோடு, முதலமைச்சர் விஜயை தயவு செய்து ஒப்பிட வேண்டாம். சினிமாவில் நடித்ததோடு சரி. பொது வெளியில் நடிக்கமாட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.