தமிழக செய்திகள்

கேங்மேன் பணியாளர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்- டிடிவி தினகரன்

காலிப்பணியிடங்களை நிரப்பும் போது கேங்மேன் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

தமிழ்நாடு மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமிக்கக் கோரி போராட்டம் - தமிழகத்தில் அரங்கேறும் அறிவிக்கப்படாத மின்வெட்டுகளை தவிர்க்கவும், தடையற்ற மின்சாரம் வழங்கிடவும் கேங்மேன் பணியாளர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்.

தகுதித்தேர்வு, எழுத்துத் தேர்வு ஆகியவற்றில் முறைப்படி தேர்வாகி கடந்த 2021 ஆம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் கேங்மேன் பணியில் இணைந்த பணியாளர்கள் கள உதவியாளர்களாக நியமிக்கப்படுவார்கள் என்ற ஒப்பந்தம் கையெழுத்தாகி பல மாதங்கள் கடந்தும் செயல்பாட்டிற்கு வராமல் இருப்பதே அவர்களை குடும்பத்துடன் போராடும் அளவிற்கான சூழலுக்கு தள்ளியுள்ளது.

தமிழ்நாடு மின்வாரியத்தில் நீண்ட காலமாக காலியாக இருக்கும் கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் அறிவித்திருக்கும் நிலையில், அத்தகைய காலிப்பணியிடங்களை நிரப்பும் போது கேங்மேன் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

எனவே, ஒப்பந்தப் பணியில் நீண்ட ஆண்டுகளாக பணியாற்றும் கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமித்து தமிழகத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கும் அறிவிக்கப்படாத மின்வெட்டிற்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு, தமிழக மக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்குவதையும் உறுதி செய்திட வேண்டும் என மின்வாரியத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.