தமிழக செய்திகள்

குழந்தைகளின் உடல்நலத்தில் அலட்சியம் காட்டாதீர்கள்: கேக்குகளைப் பரிசோதித்து வழங்க தினகரன் வலியுறுத்தல்

குழந்தைகளின் உடல்நலத்தைப் பாதிக்கக்கூடிய வகையில் தரமற்ற அல்லது கெட்டுப்போன கேக்குகள் வழங்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

குழந்தைகள் தினத்திற்காக அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் கேக்குகள் தரமற்றதாக இருக்கக்கூடாது என்பதற்காக, அவற்றின் தயாரிப்பு, காலாவதி தேதி மற்றும் பாதுகாப்பு முறைகளை பரிசோதிக்க வேண்டும் என தினகரன் வலியுறுத்தினார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பெரும் அச்சம்

குழந்தைகள் தினத்தையொட்டி தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்குவதற்காகப் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட கேக்குகள், வெகுதொலைவிலிருந்து கொண்டுவரப்பட்டு, கடந்த நான்கு நாட்களாக வாகனங்களிலேயே முறையான பராமரிப்பின்றி வைக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு மற்றும் மதிய உணவின் தரம் குறித்து அவ்வப்போது பல்வேறு புகார்கள் எழுந்துவரும் நிலையில், குழந்தைகள் தினத்தன்று வழங்குவதற்காகக் கொள்முதல் செய்யப்பட்ட கேக்குகளும் முறையான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பின்றி வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

கூடுதல் கவனம் வேண்டும்

மேலும், கேக்குகளைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி, தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, வட இந்திய மாநிலத்தைச் சேர்ந்த நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையிலும், அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட கேக்குகள் பல நாட்களாகச் சாலை மார்க்கமாகக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையிலும், அவற்றின் தயாரிப்புத் தேதி, காலாவதி தேதி, சேமித்து வைக்கப்பட்ட விதம் மற்றும் தரம் ஆகியவற்றை முறையாகப் பரிசோதிப்பது மிகவும் அவசியமாகியுள்ளது. குறிப்பாக, குழந்தைகளின் உடல்நலத்தைப் பாதிக்கக்கூடிய வகையில் தரமற்ற அல்லது கெட்டுப்போன கேக்குகள் வழங்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

எனவே, நாளை தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படவுள்ள கேக்குகளை, அதற்கென நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மூலம் உரிய தரப் பரிசோதனைக்கு உட்படுத்துவதுடன் குழந்தைகளின் உடல்நலத்துடன் தொடர்புடைய இவ்விவகாரத்தில் அலட்சியம் கொள்ளாமல் தரமான மற்றும் பாதுகாப்பான கேக்குகள் மட்டுமே மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படுவதைப் பள்ளிக்கல்வித்துறையும் தவெக அரசும் உறுதிசெய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

SCROLL FOR NEXT