டிடிவி தினகரன்
தமிழக செய்திகள்

எந்த கட்சியாக இருந்தாலும் திரை பிரபலங்களை பயன்படுத்திக் கொள்வது இயற்கை: டி.டி.வி. தினகரன்

காங்கிரஸ் மற்றும் பாஜக போன்ற கட்சிகளும் திரைபிரபலங்களை இணைத்துக் கொள்வது இயற்கை.

அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் சிவங்கையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அதிமுக-வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான். கடந்த 9 ஆண்டுகளாக அவர்தான் அந்த கட்சியின் தலைமையில் இருக்கிறார். அவரை நாங்கள் முதலமைச்சராக்கிய பிறகு, நாங்கள் எல்லோரும் வெளியேற்றப்பட்டாலும் அங்கே இருப்பவர்கள், இன்றைக்கு குறை சொல்பவர்கள், பதவியில் அமர்த்தவில்லை என்று வருத்தப்படுவர்கள் அனைவரும் சேர்ந்துதான் அவரை பொதுச் செயலாளர் ஆக்கினார்கள். மீண்டும் அம்மா ஆட்சி வர வேண்டும் என்பதற்காக அம்மாவின் தொண்டர்கள் இன்றைக்கு ஓர் அணியில் திரண்டு இருக்கிறோம்.

நிர்மல் குமார் அதிமுகவில் இருந்தவர்தான்

நிர்மல் குமார் அதிமுகவில் இருந்தவர்தான். இந்த கட்சி ஆட்சியில் இல்லை என்றால் அவர் எந்த கட்சியில் இருப்பார் என்றே தெரியாது. அவர் பேசுவதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். வருத்தம், குமுறல் இருக்கலாம். மீண்டும் அம்மா ஆட்சியை கொண்டு வர முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் சிலர் பேசுவார்கள். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவர் அம்மா ஆகிய இருவரும் இன்று இல்லை. இதனால் அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வந்தால்தான், சட்டம்-ஒழுங்கை பராமரிக்கின்ற ஆட்சியை கொண்டு வர முடியும்.

எம்.ஜி.ஆர்., அம்மா காலத்திலும் திரை பிரபலங்கள்

நடிகர் ஒருவர் (தனுஷ்) வர வேண்டும் என அதிமுக காத்திருப்பதாக தொலைக்காட்சிகளில் பேசுவதை பார்த்தேன். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். திரையுலகில் இருந்து வந்தாலும், அவரது காலத்தில் எஸ்.எஸ்.ஆர். ஆண்டிப்பட்டியில் நின்று எம்.எல்.ஏ. ஆனார். எம்.ஜி.ஆர். உடன் பயணம் செய்தார். மேலும் பல நடிகர்கள் இருந்தார்கள்.

அம்மா காலத்திலும் ராமராஜன் அதிமுக-வுக்கு ஆதரவாக செயல்பட்டார். காங்கிரஸ் மற்றும் பாஜக-வாக இருக்கட்டும், திரை பிரபலங்களை கட்சியில் இணைத்துக் கொண்டு, கொள்கைகளை பரப்புவதற்கான பயன்படுத்திக் கொள்வது இயற்கை. அந்த வகையில் சிலர் வந்தால் சரியாக இருக்கும் என்ற வகையில் நீங்கள் கேட்கிறீர்கள். வந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் கட்சியில் உள்ளவர்கள் சொல்வார்கள்.

அம்மாவின் ஆட்சி வர வேண்டும் என கோரிக்கை

திரை பிரபலங்கள் வந்துதான் ஏற்கனவே உள்ள அரசியல் இயக்கத்தை எடுத்து நிறுத்த முடியும் என்பதெல்லாம் அம்மா கட்சியை குறைத்து மதிப்பிட பேசும் வாதங்கள். சி.வி. சண்முகம், வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் போன்றோர் அம்மாவின் ஆட்சி வர வேண்டும் என்றுதான் கோரிக்கை வைக்கிறார்கள். அம்மா கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக அமமுக அவர்களுடன் தோளோடு தோள் நிற்கிறோம்.

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT