தமிழக செய்திகள்

ஒப்பந்தப் பணிகளுக்கு 20% கமிஷன் புகார்: தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது தினகரன் கடுமையான விமர்சனம்

மக்கள் நலத் திட்டங்களை முறையாகச் செயல்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளதோடு, பல்வேறு தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகளும் முடங்கிப் போயுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

சிவகங்கை தவெக சட்டமன்ற உறுப்பினர் குழந்தை ராணி மீது 20% கமிஷன் புகார் எழுந்துள்ளது. ஒப்பந்தப் பணிகளில் முறைகேடு, ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்தும் அதிகரிக்க, முதலமைச்சர் விஜய் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.டி.வி. தினகரன் வலியுறுத்தினார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சிவகங்கையில் VB-G RAM G திட்டத்தின் (125 நாள் வேலைவாய்ப்புத் திட்டம்) கீழ் ஒதுக்கப்பட்டுள்ள சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை விதிமுறைகளை மீறி தவெக கட்சி நிர்வாகிகளுக்கு மட்டுமே வழங்க முயற்சிப்பதாகவும், இவ்வொப்பந்தங்களை வழங்குவதற்காக ஊராட்சி ஒன்றியத்தில் பதிவு செய்துள்ள ஒப்பந்ததாரர்களிடம் 20 சதவீதம் வரை கமிஷன் கேட்பதாகவும் சிவகங்கை தவெக சட்டமன்ற உறுப்பினர் குழந்தை ராணி அவர்கள் மீது புகார் எழுந்துள்ளது.

புகார்கள்

சிவகங்கை மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடங்கி சாதாரணக் கட்சி நிர்வாகிகள் வரை கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவது, கமிஷன் கேட்பது, அரசு அதிகாரிகளை மிரட்டுவது என பல்வேறு அதிகார துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டு வருவதாக ஒப்பந்ததாரர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், மக்கள் நலத் திட்டங்களை முறையாகச் செயல்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளதோடு, பல்வேறு தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகளும் முடங்கிப் போயுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

"உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால், இது உங்கள் விஜய் ஆட்சி என்று சொல்லி லஞ்சம் கொடுக்காதீர்கள்" என மக்களுக்கு அறிவுரை வழங்கிய முதலமைச்சர் விஜய், தனது அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது எழும் ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகளை முறையாக விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாகச் செயல்பட்டு வருவதன் விளைவாக, இன்று ஒரு சட்டமன்ற உறுப்பினரே 20 சதவீதம் வரை கமிஷன் என்ற பெயரில் 'சர்வீஸ் சார்ஜ்' கேட்கும் அளவிற்கு நிலைமை மோசமடைந்துள்ளது.

ஊழலை ஒழிப்போம், நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவோம், அரசியலில் புதிய மாற்றத்தைக் கொண்டு வருவோம் எனத் தேர்தல் நேரத்தில் வீராவேசமாகப் பஞ்ச் டயலாக்குகளைப் பேசிய முதலமைச்சர் விஜய், தனது அமைச்சர்கள் தொடங்கி சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் வரை பலர் மீது தொடர்ந்து எழுந்துவரும் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்வாரா? அல்லது எப்போதும் போல, மக்கள் எக்கேடு கெட்டாலும் தனக்கென்ன என்ற மனப்பான்மையுடன் மௌனமாகக் கடந்து செல்வாரா?

எனவே, தவெக ஆட்சி அமைந்தது முதல் போதைப்பொருள் கடத்தல், பயன்படுத்துதல், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், அரசு பதவிகளைப் பெற 5 கோடி ரூபாய் வரை லஞ்சப் பேரம் என அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொடங்கி தவெக நிர்வாகிகள் மீது எழுந்த புகார்களில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாகக் கடந்து சென்றதைப் போல, சிவகங்கை தவெக சட்டமன்ற உறுப்பினர் மீதான இந்தப் புகாரையும் அலட்சியப்படுத்திவிடாமல், விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டு, குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மீது எவ்விதத் தயக்கமுமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் விஜயை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

SCROLL FOR NEXT