தமிழக செய்திகள்

இலவச அரிசியைச் சன்னரக அரிசி எனக் கூறி நூதனமான முறையில் மக்களை ஏமாற்றி விற்கும் தவெக அரசு- தினகரன் சாடல்

ரூ.30-க்கு விற்பனை செய்யப்படும் சன்னரக அரிசியின் தரம் மிகவும் மோசமாக இருப்பதால், அதன் விற்பனை மந்தமடைந்து, அரிசி மூட்டைகள் அதிகளவில் தேக்கமடைந்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

சன்னரக அரிசி என்ற பெயரில் தரமற்ற அரிசி விற்பனை செய்யப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தி, இந்த முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தரமான சன்னரக அரிசியைப் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதையும் உறுதிசெய்ய வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துவதாக டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அவல நிகழ்வு

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அமுதம் கூட்டுறவுக் கடைகள் மூலம் கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்படும் சன்னரக அரிசியின் தரம் மிகவும் மோசமாக இருப்பதால், அதன் விற்பனை மந்தமடைந்து, அரிசி மூட்டைகள் அதிகளவில் தேக்கமடைந்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதிலும், தேனி மாவட்டம், கம்பத்தில் உள்ள நியாயவிலைக் கடை ஒன்றில், அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா அவர்கள் தொடங்கி வைத்த சன்னரக அரிசி விற்பனையில், ரேஷன் அரிசியையே கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்வதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியதோடு, அதனைத் திருப்பி ஒப்படைத்த அவல நிகழ்வும் அரங்கேறியுள்ளது.

அரிசியின் தரத்தைப் பரிசோதித்தார்களா?

அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அமுதம் கூட்டுறவுக் கடைகளில் சன்னரக அரிசியைக் கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யும் திட்டத்தின் தொடக்க நிகழ்வை பிரம்மாண்டமாக நடத்திய அமைச்சர்கள், பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் அரிசியின் தரத்தைப் பரிசோதித்தார்களா? அல்லது தங்களது Reels கண்டென்ட்காக சன்னரக அரிசி வழங்குவதாகக் காட்டிவிட்டு, இலவச ரேஷன் அரிசியைப் பாலிஷ் செய்து, சன்னரக அரிசி என மக்களுக்கு முறைகேடாக விற்பனை செய்து ஏமாற்ற முயல்கின்றனரா? என்ற கேள்வி எழுகிறது.

எனவே, சன்னரக அரிசி என்ற பெயரில் தரமற்ற அரிசி விற்பனை செய்யப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தி, இந்த முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தரமான சன்னரக அரிசியைப் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதையும் உறுதிசெய்ய வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.

SCROLL FOR NEXT