படப்பை அடுத்த வரத ராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட தனியார் குடியிருப்பு அருகே செல்லும் அடையாறு ஆற்றின் கிளைக் கால்வாயில், லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் செப்டிக் டேங்க் கழிவுநீர் சட்டவிரோதமாக ஊற்றப்படுகிறது.
படப்பை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான லாரிகளில் கழிவுநீர் ஊற்றப்பவடுதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது தொடர்பான வீடியோ ஆதாரத்துடன் மாவட்ட கலெக்டருக்கு புகார் மனுவும் அளித்துள்ளனர். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, இந்தக் கால்வாய் அடையாறு ஆற்றில் கலப்பதால் லாரிகளில் கொண்டு வந்து ஊற்றப்படும் கழிவுநீரும் ஆற்றில் கலந்து நீர்நிலைகள் மாசடையும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மேலும், இந்தப் பகுதியில் சென்னைக்குக் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரமான பாலாற்றில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லும் பிரதான குழாயும், அதில் இருந்து காற்றை வெளியேற்றுவதற்கான குழாயும் அமைந்துள்ளன.
இதனால் நிலத்தடி நீர் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்படும் நிலையும் உள்ளது. மேலும் கழிவுநீர் கொட்டப்படும் பகுதி காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இதனால் அருகில் உள்ள காவல் உதவி மையத்திலோ அல்லது மணிமங்கலம் போலீஸ் நிலையத்திலோ புகார் அளிக்கச் சென்றால், சம்பந்தப்பட்ட பகுதி செங்கல்பட்டு மாவட்டம், ஓட்டேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்டது எனக் கூறுகிறார்கள். ஓட்டேரி காவல் நிலையத்தை அணுகினால் அது காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது எனக்கூறி அலைக்கழிக்கின்றனர். நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இதனை பயன்படுத்தி கால்வாயில் கழிவு நீரை கொண்டு வந்து ஊற்றுவது தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.