தமிழக செய்திகள்

3 நாட்களாக மாஞ்சோலையை கலங்கடித்தது: மீண்டும் முத்துக்குழிவயலுக்கு திரும்பிய அரிக்கொம்பன் யானை

தொடர்ந்து அதனை ரேடார் கருவி பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.வனப்பகுதிக்குள் விரட்ட களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக அதிகாரிகள் உத்தரவின்பேரில் வனத்துறையினர் முகாமிட்டனர்.

நெல்லை:

கேரளா மாநிலம் மற்றும் தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய அரிக்கொம்பன் யானை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது.

பின்னர் அந்த யானை குமரிமாவட்டம் மேல் கோதையாறு பகுதியை கடந்து குட்டியாறு அணை அருகே முத்துக்குழி வயல் பகுதியில் விடப்பட்டது. தொடர்ந்து அதனை ரேடார் கருவி பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 17-ந்தேதி மாஞ்சோலை பகுதிக்கு வந்த அரிக்கொம்பன் நாலுமுக்கு எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது. அதனை வனப்பகுதிக்குள் விரட்ட களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக அதிகாரிகள் உத்தரவின்பேரில் வனத்துறையினர் முகாமிட்டனர்.

இந்நிலையில் மஸ்து பாதிப்பால் ஆக்ரோசமாக இருந்த அந்த யானைக்கு நேற்று காலை பாதிப்பு குறைந்து ஊத்து தொழிற்சாலை, பள்ளிக்கூடம் பகுதியில் சுற்றித்திரிந்தது. அதனை விரட்டினால் குடியிருப்புக்குள் புகுந்துவிடும் என்பதால் வனத்துறையினர் நிதானம் காட்டி வந்தனர்.

தொடர்ந்து அதன் நடமாட்டத்தை ரேடார் மூலம் அதிகாரிகள் கண்காணித்து வந்த நிலையில், நேற்று மதியம் மேல் கோதையாறு பகுதிக்கு அரிக்கொம்பன் திரும்பியது. அங்கு சாரல் மழை பெய்து கொண்டே இருந்ததால், அந்த இதமான சூழ்நிலையை நோக்கி அரிக்கொம்பன் நகர்ந்து கொண்டே இருந்த நிலையில் இரவு முத்துக்குழி வயல் பகுதியை அடைந்தது.

தற்போது முத்துக்குழி வயல் பகுதியில் தனக்கு தேவையான உணவை அரிக்கொம்பன் யானை தேடி அலைவதாகவும், ஆனாலும் யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகப்பிரியா தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட வனப்பகுதியில் விடவேண்டும் என்று கேரளாவை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டவர்கள் அரிக்கொம்பன் யானை மீட்பு குழு என்ற பெயரில் அம்பை வனக்கோட்ட அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக தமிழக அரசுக்கும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT