தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் உள்ள நடிகை திரிஷா சமீப காலமாக சர்ச்சையில் சிக்கி வருகிறார். அவர் ஏதாவது ஒரு போஸ்ட் போட்டால்கூட அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேசு பொருளாகி வருகிறது. இந்த நிலையில், நடிகை திரிஷாவை அம்மன் போல சித்தரித்து ரசிகர்கள் வைத்த போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஆடி மாதம் தொடங்கினால் அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் களைகட்டும். திருவிழா தொடர்பாக வித்தியாசமாக வைக்கப்படும் பேனர்கள் வைரலாகும். அந்த வகையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழாவையொட்டி ஆத்தூர் பயணியர் மாளிகை பகுதியில் பேனர்கள் வைக்கப்பட்டன. அதில் ஒரு பேனரில் தமிழக முதலமைச்சர் விஜய்யின் மிகப்பெரிய படமும், அதற்கு பின்னால், ராவணன் தலை இருப்பது போன்றும்... அதற்கு கீழே நடிகை திரிஷா அம்மன் வேடத்தில் இருப்பது போன்ற படம் அச்சிடப்பட்டிருந்தது.
இந்த பேனரின் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. இதனை பார்த்த நெட்டிசன்கள், கோவில் திருவிழாவில் நடிகையின் போட்டோவை அம்மன் வேடத்தில் வைத்து பேனர் அடிக்க வேண்டிய அவசியம் என்ன? கடவுள் திருவிழாவிற்கும் சினிமா பிரபலங்களுக்கும் சம்பந்தமே இல்லாத விஷயத்தை ஏன் இப்படி செய்கிறார்கள்? என்று தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் பேனர்கள் வைப்பது தொடர்பாக நீதிமன்றங்களும் அரசும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தும் பேனர்கள் எப்படி வைக்கப்படுகின்றன? கோவில் திருவிழா என்ற பெயரில் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் அச்சிடிட்டு வைக்கலாமா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து இரவோடு இரவாக பேனரில் இருந்து நடிகை திரிஷா புகைப்படம் மாற்றப்பட்டது. திரிஷா படம் இருந்த இடத்தில் வேறு ஒரு பெண் அம்மன் வேடத்தில் இருப்பது போன்ற படத்தை ஒட்டி வைத்தனர்.
இதற்கிடையே, ஆத்தூர் பயணியர் மாளிகை முன்பு அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வைக்கப்பட்ட பேனர்களை போலீசார் அகற்றினர். இதுகுறித்த புகாரின்பேரில் ஆத்தூர் டவுன் போலீசார் கடைவீதியை சேர்ந்த சந்துரு, தலைவாசல் பகுதியை சேர்ந்த கோகுல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் கோவில் திருவிழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.