தமிழ்நாடு 2026 தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாவட்டவாரியாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் இன்று திருச்சி, பொன்மலையில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,.
“திருச்சியை அதிமுகவின் கோட்டையாக மாற்றுங்கள். ஸ்டாலின் பேசுவது அத்தனையும் பொய். திமுக பல நாடகத்தை அரங்கேற்றுகிறது. திமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சி ஏற்பட்டதாகவும் வேலைவாய்ப்பு கிடைத்ததாகவும், இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சி என்றும் பொய்பேசி வருகிறார்.
அதிமுக ஆட்சியின் ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்ததால் தான் இந்த வளர்ச்சி ஏற்பட்டது. இந்த பொருளாதார வளர்ச்சிக்கு மூலகாரணம் அதிமுக அரசு. திமுக ஆட்சியில் 1179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், 15 லட்சத்து கோடி ரூபாய் தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டது என்று ஸ்டாலின் பச்சை பொய் சொல்கிறார், இதனால் 35 லட்சம் பேருக்கு வேலை கிடைத்ததாம்.
இது எப்படிப்பட்ட பொய்..? ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்ட பின் நிலம் எடுக்க வேண்டும், நிலத்தை வாங்கிய பின், மாநில அரசு, மத்திய அரசிடம் அனுமதி வாங்க வேண்டும், நிதி ஆதாரத்தை பெருக்க வேண்டும். முழுதாக பணம் வைத்துக்கொண்டு யாரும் தொழிற்சாலை அமைப்பதில்லை, வங்கியை நாடி கடன் பெற வேண்டும், அதன் பின்னர் கட்டிடம் கட்ட வேண்டும், அப்புறம் தான் தொழிற்சாலை பயன்பாட்டுக்கு வரும், அதற்கு நான்காண்டுகள் பிடிக்கும்.
ஆனால் ஸ்டாலின் என்ன சொல்கிறார்..? ஒப்பந்தம் போட்டவுடனே 35 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துவிட்டதாம். திருச்சியில் 9 தொகுதியில் எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது? மக்களை ஏமாற்றியே காலத்தை ஓட்டிவிட்டார். அதிமுக ஆட்சியின் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்துதான் இரட்டை இலக்க வளர்ச்சி.
சட்டமன்றத்தில் ஏன் வேளாண்மைதுறையில் வளர்ச்சி குறைந்தது என்ற கேள்விக்குப் பதில் இல்லை. தொழிற்துறை மந்திரியிடம் கேட்டேன், தொழிற்சாலை நிலை என்ன, எவ்வளவு பேருக்கு வேலை என்று வெள்ளை அறிக்கை கேட்டால், வெள்ளை பேப்பர் காட்டுகிறார்.
எதிர்க்கட்சித் தலைவராக நான் கேட்கிறேன், ஆனால் அவர் வெள்ளைப் பேப்பரைக் காட்டுகிறார். உண்மைதான், அவர் ஒன்றுமே செய்யவில்லை, செய்தால்தானே காட்ட முடியும், அவர் உண்மையை ஒப்புக்கொண்டதற்கு நன்றி. வெளிநாட்டுக்கு தொழில் முதலீட்டை ஈர்க்க போகிறேன் என்று சென்று, அங்கு போய் சைக்கிள் ஓட்டுகிறார்.
அதுக்குத்தான் உங்களை முதலமைச்சர் ஆக்கினோமா? உங்கள் (மக்கள்) வரிப்பணத்தை எப்படி வீணடிக்கிறார் என்று பாருங்கள். இப்போதுதான் கடைக்குச் சென்று டீ குடிக்கிறார், இப்போதாவது, ஏழைகளின் கஷ்டத்தைப் பாருங்கள். சைக்கிள் ஓட்டுவதையும், பளு தூக்குவதையும் படம் பிடித்து டிவியில் காட்டுகிறார். அவருக்கு ஓட்டு போட்டதற்கு இதுதான் பலன்.” என தெரிவித்தார்.