செல்வத்தின் அண்ணன் ஏனாதியை சேர்ந்த கணேசன் அளித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள ரெங்காநகர் 16-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 51). இவரது மனைவி ராதிகா(37). இவர்களுக்கு விவேகா(16) என்ற மகளும், விசாகன்(12) என்ற மகனும் உள்ளனர். இதில் விசாகன் சிறிது மனவளர்ச்சி குன்றியவர். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த செல்வம் தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் தனது சொந்த ஊரான பட்டுக்கோட்டை அருகே உள்ள ஏனாதியில் சொந்தமாக வீடு கட்டி வந்தார். கடந்த சில நாட்களாக அதனை பார்ப்பதற்காக தனது மனைவி ராதிகாவை அழைத்துள்ளார். ராதிகா வர மறுத்து தினமும் தனது கணவருடன் சண்டை போட்டுள்ளார்.
நேற்று கணவன் மனைவிக்கிடையே தகராறு முற்றிய நிலையில் செல்வம் வெளியே சென்று விட்டார். தனியாக மன உளைச்சலில் இருந்த ராதிகா தனது படுக்கை அறைக்கு சென்று அங்குள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார்.
சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த செல்வம் தனது மனைவி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்ததுடன், உடனடியாக மனைவியை கீழே இறக்கிப் பார்த்தார். அப்போது மனைவி உயிரிழந்தது தெரிந்ததும் சோகத்தில் தனது மனைவியின் சேலையால் அதே மின்விசிறியில் தூக்குப்போட்டு கொண்டார்.
பள்ளிக்கு சென்ற விவேகா மாலை வீடு திரும்பிய நிலையில் வீட்டின் கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை திறந்து பார்த்துள்ளார். அப்போது செல்வம் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையிலும் ராதிகா இறந்த நிலையிலும் கீழே கிடப்பதை பார்த்து அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனே சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த ஜீயபுரம் டி.எஸ்.பி., சங்கர் மற்றும் சோமரசம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு இறந்து கிடந்த செல்வம், ராதிகா ஆகியோர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செல்வத்தின் அண்ணன் ஏனாதியை சேர்ந்த கணேசன் அளித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீடு கட்டும் பிரச்சினையில் இந்த சம்பவம் நிகழ்ந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தப்பட்டு வரு கிறது. கணவன்- மனைவி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.