தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கான தகுதியை நிர்ணயிக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2க்கான ஹால் டிக்கெட் தற்போது அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தேர்வுத் தேதிகள் மற்றும் அட்டவணை..
இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுகள் ஜூலை 4 ஆம் தேதி முதல் தாளும், ஜூலை 5 ஆம் தேதி இரண்டாம் தாளும் திட்டமிட்டபடி எந்த ஒரு மாற்றங்களும் இல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் பலத்த பாதுகாப்புடன் நடைபெற உள்ளன.
ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்வது எப்படி?
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பித்துள்ள தேர்வர்கள், https://trb1.ucanapply.com/login அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று தங்களது ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தேர்வர்கள் இணையதளப் பக்கத்தில் தங்களது பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்து, ஹால் டிக்கெட்டை மிகவும் எளிதாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்..
தேர்வு எழுதச் செல்லும் அனைத்து தேர்வர்களும் தங்களுடைய ஹால் டிக்கெட்டை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும். ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு மையம், தேர்வு நடக்கும் நேரம் மற்றும் அதில் கொடுக்கப்பட்டுள்ள பொதுவான வழிகாட்டுதல்களைத் தேர்வர்கள் முன்கூட்டியே படித்துப் பார்த்துக் கொள்ளுமாறு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.