சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
IPL 2026 போட்டியை காண செல்பவர்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணச்சீட்டுகளை பயன்படுத்தி சென்னை மெட்ரோ ரெயிலில் பயணிக்கலாம்.
பயணிகளின் வசதியை மேம்படுத்தவும், நகரில் நடைபெறும் முக்கிய விளையாட்டு நிகழ்வுகளுக்குத் தடையற்ற பயணத்தை வழங்கவும், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் CSK Cricket Limited நிறுவனத்துடன் இணைந்து “IPL 2026” லீக் போட்டிகளைக் காண வரும் ரசிகர்களுக்காக, பிரத்யேக மெட்ரோ பயணங்களை வழங்க முன்வந்துள்ளது.
அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ள, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)- சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH) அணிகள் இடையிலான IPL 2026 லீக் போட்டி எண் 63, வருகின்ற திங்கள்கிழமை (18-ந்தேதி) நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக ரசிகர்களுக்கு ஸ்பான்சர் செய்யப்பட்ட மெட்ரோ பயணங்களும், கூடுதல் மெட்ரோ ரெயில் சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்பான்சர் செய்யப்பட்ட IPL போட்டிகான பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள், பயணச் சீட்டுகளில் (both Digital & Physical) உள்ள தனித்துவமான QR குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். இந்த சிறப்பு சலுகை ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம். சென்னையில் செயல்பாட்டில் உள்ள எந்த மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு இடையே மெட்ரோ ரெயிலில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம்.
மே 18, 2026 அன்று CSK மற்றும் SRH அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, அரசினா் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்து நீட்டிக்கப்பட்ட சிறப்பு மெட்ரோ ரெயில் சேவை குறித்த விவரங்கள்:
அரசினா் தோட்டம் மெட்ரோ நிலையத்திலிருந்து விம்கோ நகர் பணிமனை மற்றும் விமான நிலைய மெட்ரோ நிலையங்களை நோக்கிச் செல்லும் கடைசி மெட்ரோ ரெயில் நள்ளிரவு 01:00 மணிக்கு புறப்படும்.
பச்சை வழித்தடத்தில் (வழித்தடம் 2) உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள் புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் மட்டுமே வழித்தடம் மாற்றம் செய்து கொள்ளலாம்.
பயணிகள் கடைசி மெட்ரோ ரெயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்குள் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
IPL 2026 போட்டியை காண செல்பவர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இந்த வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.