தமிழக செய்திகள்

ஜி.பி.எஸ்.பொருத்தாத லாரிகளில் ஜல்லி, எம்சாண்ட் கொண்டு செல்ல அனுமதி இல்லை- நாளை முதல் கனிம வளத்துறை நடவடிக்கை

கனிம வளங்கள் முறைகேடாக கடத்தப்படுவதை தடுக்க லாரிகளில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட வேண்டும் என்று அவகாசம் கொடுக்கப்பட்டது.

தமிழகத்தில் கனிம வளங்கள் வெளிமாநிலங்களுக்கு சட்டவிரோதமாக கடத்தப்படுவதை தடுக்க, ஜி.பி.எஸ். கருவி இல்லாத லாரிகளில் ஜல்லி, எம் சாண்ட், மணல் ஏற்றிச் செல்ல அரசு தடை விதிக்கிறது. ஒரு லட்சத்து 40 ஆயிரம் லாரிகளில் 24 ஆயிரத்துக்கு மட்டுமே ஜி.பி.எஸ். பொருத்தப்பட்டுள்ளதால், நாளை முதல் ஜி.பி.எஸ். இல்லாத லாரிகளின் டிரிப் ஷீட் ரத்து செய்யப்படும் என கனிம வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் உள்ள கனிம வளங்கள் வெளி மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, தெலுங்கானாவிற்கு கடத்தப்பட்டு வந்தது.

புதிய திட்டம்

அனுமதி இல்லாத லாரிகள் மூலம் தமிழகத்திற்கு உள்ளேயும் கனிம வளங்கள் சுரண்டப்பட்டன. இதனை தடுக்க த.வெ.க. அரசு புதிய திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

கனிம வளங்கள் ஏற்றக்கூடிய லாரிகளில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதற்கான அவகாசம் இன்று வரை கொடுக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான லாரிகளில் இன்னும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படவில்லை. அதனால் அந்த லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இதுகுறித்து கனிம வளத்துறை இணை இயக்குனர் ஆறுமுக நாயனார் கூறியதாவது:-

ஜிபிஎஸ் கருவி

கனிம வளங்கள் முறைகேடாக கடத்தப்படுவதை தடுக்க லாரிகளில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட வேண்டும் என்று அவகாசம் கொடுக்கப்பட்டது. இன்றுடன் அந்த கால அவகாசம் நிறைவுபெறுகிறது. தமிழகத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் லாரிகள் கனிம வளம் ஏற்றுவதற்கு விருப்பம் தெரிவித்து பதிவு செய்துள்ளன. ஆனால் இதுவரையில் 24 ஆயிரம் லாரியில் மட்டுமே ஜி.பி.எஸ். பொருத்தப்பட்டு உள்ளது.

மீதமுள்ள லாரிகளில் உடனடியாக பொருத்தப்பட வேண்டும். இல்லையென்றால் அதனுடைய டிரிப் ஷீட் ரத்து செய்யப்படும். அனுமதி இல்லாமல் இனிமேல் கனிம வளங்களை லாரியில் எடுத்துச் செல்ல முடியாது. ஜி.பி.எஸ். கருவிப் பொருத்திய லாரிகளில் மட்டுமே கனிம வளங்கள் இனி ஏற்ற முடியும். மற்ற எந்த லாரிகளிலும் கருங்கற்களோ, எம் சாண்ட், மணல் போன்றவற்றை எடுத்துச் செல்ல முடியாது.

அதையும் மீறி கனிம வளங்கள் கடத்துவது பற்றி பொதுமக்கள் புகார் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கனிம வளத்துறையின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு மணல் லாரிகள் சங்க கூட்டமைப்பு ஆதரவு அளித்து உள்ளது. கனிம வளங்கள் கொள்ளை அடிப்பதை தடுப்பதற்கு அரசு எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் உறுதுணையாக இருப்போம் என்று அதன் தலைவர் யுவராஜ் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT