அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போக்குவரத்துக் கழக ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலக்கோடு அருகே உள்ள பூகானஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி (50). இவர் பாலக்கோடு அரசு போக்குவரத்துப் பணிமனையில் கடந்த 20 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்தார். தற்போது கண்ட்ரோலராகப் பணியாற்றி வந்த இவர், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், பணிச்சுமை காரணமாக மன உளைச்சலில் இருந்ததாகவும், தனக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும் என்று பணிமனை கிளை மேலாளரிடம் பலமுறை தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று பணியில் இருந்தபோது முனுசாமி திடீரென மயங்கி விழுந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து சக ஊழியர்கள் அவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதித்தனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையே, இன்று காலை கழிவறைக்குச் சென்ற முனுசாமி, அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள், இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போக்குவரத்துக் கழக ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து பாலக்கோடு போலீசார் உயிரிழப்புக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.