தமிழக செய்திகள்

கரூரில் ஒரேக் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சோகம் - விசாரணையில் அதிர்ச்சி!

எனது ஒரே மகளின் வாழ்க்கை சரியாக அமையாமல் போனது எங்களை வேதனைக்குள்ளாக்கியது.

கரூர் வெங்கமேடு கொங்கு நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 63). இவரது மனைவி ஜானகி (60). இவர்களது மகன் கண்ணன், மகள் சுகுணா (35). சுகுணாவை வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த பிரபு என்பவருக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தனர்.

அவர்களுக்கு சிவானி (10) என்ற மகளும் , ஆதிரன் (4) என்ற மகனும் உள்ளனர். சிவானி கரூர் வெண்ணைமலை தனியார் பள்ளியில் 5-ம்வகுப்பும், ஆதிரன் நாமக்கல் மாவட்டம் வேலூர் தனியார் பள்ளியில் எல்.கே.ஜி.யும் படித்து வந்தனர்.

கணவன் - மனைவி தகராறு

இந்நிலையில் சுகுணாவிற்கும், அவரது கணவர் பிரபுவிற்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவதும், சுகுணா கோபித்துக் கொண்டு வேலாயுதம்பாளையத்தில் இருந்து கரூர் வெங்கமேட்டில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வருவதும், போவதுமாக இருந்துள்ளார்.

பின்னர் பெற்றோர் சுகுணாவை சமாதானப்படுத்தி கணவர் வீட்டிற்கு அனுப்பி வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 15-ந்தேதிக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த சுகுணா தனது 2 குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு வந்துவிட்டார்.

அதன்பிறகு ராமசாமி, தனது மனைவி, மகள், பேரன், பேத்தியுடன் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.

கிணற்றில் உடல்கள்

இச்சூழலில் ராமசாமிக்கு சொந்தமான கரூர் அருகே சின்னகாளி பாளையத்தில் உள்ள வயல் காட்டில் இருந்த பெரிய கிணற்றில் 5 பேரின் உடல்கள் மிதப்பதாக பக்கத்து தோட்டக்காரர் கருப்பண்ணன் மூலம் வாங்கல் போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது.

இதையடுத்து கரூர் மாவட்ட எஸ்.பி. ரகுபதி, டி.எஸ்.பி. ராஜராஜன் மற்றும் வாங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது கிணற்றில் இறந்து கிடந்தது ராமசாமி, அவரது மனைவி ஜானகி, மகள் சுகுணா, பேரன் ஆதிரன், பேத்தி சிவானி என்பது தெரியவந்தது.

உடல் அழுகி இருந்ததால் அடையாளம் காண்பதற்காக சம்பவ இடத்திற்கு ராமசாமியின் மகன் கண்ணன் வரவழைக்கப்பட்டார்.

அவர் இறந்த உடல்கள் தனது தந்தை, தாய், தங்கை, தங்கையின் இரு குழந்தைகள்தான் என்பதை உறுதிப்படுத்தினார்.

உடனே சம்பவ இடத்திற்கு கரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் வரவழைக்கப்பட்டு, 5 பேரின் உடல்களையும் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கொலையா? தற்கொலையா?

கிணற்றில் மிதந்து கொண்டிருந்த 5பேரின் உடல்களையும் தீயணைப்பு வீரர்கள் மீட்ட போது, ஒரு உடலுடன் மற்றொரு உடல் கயிற்றால் பிணைக்கப்பட்டிருந்தது. ராமசாமி உடலுடன் அவரது பேத்தி சிவானி உடலும், சுகுணா உடலுடன் அவரது மகன் ஆதிரன் உடலும் இடுப்பில் கயிற்றால் பிணைக்கப்பட்டிருந்தது.

ஐந்து பேரின் உடல்களும் கயிற்றால் கட்டப்பட்டிருந்ததால், இது கொலையா இருக்குமா என போலீசார் சந்தேகித்தனர். தொடர்ந்து விசாரணையைத் தொடங்கினர்.

பணம் விவகாரம்

சுகுணாவின் கணவர் பிரபு கார் புரோக்கர் தொழில் மற்றும் பல தொழில்கள் செய்து வந்துள்ளார். ஆனால் அதில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவியிடம், அவரது வீட்டில் பணம் பெற்று வரும்படி அடிக்கடி வற்புறுத்தி உள்ளார்.

கணவர் கூறியபடி சுகுணாவும் அடிக்கடி பெற்றோர் வீட்டிற்கு சென்று பணம் பெற்று வந்து கொடுத்துள்ளார். இதன் காரணமாக அவர்களுக்குள் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் சுகுணா கணவரிடம் கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். கடந்த தீபாவளியன்று பெற்றோர் வீட்டிற்கு 2 குழந்தைகளுடன் வந்த சுகுணா, இனி பிரபுவுடன் வாழ விருப்பம் இல்லை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக 5 பேரும் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

கடிதம்

இதைத்தொடர்ந்து போலீசார் கரூர் வெங்கமேடு கொங்குநகரில் உள்ள ராமசாமியின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு 5 பேரும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ராமசாமி தனது மகனுக்கு எழுதியிருந்த உருக்கமான கடிதம் சிக்கியது.

அதில், எனது ஒரே மகளின் வாழ்க்கை சரியாக அமையாமல் போனது எங்களை வேதனைக்குள்ளாக்கியது. இதனால் நாங்கள் அனைவரும் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளோம். எங்கள் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை.

நாங்கள் வாங்கிய கடனுக்கு சொத்தை விற்று கடனை அடைத்து விடுமாறு எழுதப்பட்டிருந்தது.

அந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மூலம் மகளின் வாழ்க்கை சரியாக அமையாததால் ராமசாமி , மனைவி,மகள்,பேரன்,பேத்தியுடன் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

இருப்பினும் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே 5 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளது. உடல் அழுகி இருப்பதால் 5 பேரின் உடல்களும் தகனம் செய்யப்பட உள்ளது.

SCROLL FOR NEXT