சென்னை மாநகரில் உள்ள போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் காவலர்கள் இணைந்து அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொண்டனர். போக்குவரத்து விதிமீறல்கள் அற்ற நாள் என்ற பெயரில் இன்று 81 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
சென்னையில் தினமும் போக்குவரத்து போலீசார் சாலைகளில் நின்று கொண்டு விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.
போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சாமூண்டீஸ்வரி, இணை கமிஷனர் பகலவன் ஆகியோரது மேற்பார்வையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று சென்னை மாநகரில் உள்ள போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் காவலர்கள் இணைந்து அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொண்டனர்.
போக்குவரத்து விதிமீறல் அற்ற நாள் என்ற பெயரில் இன்று 81 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. போக்குவரத்து அதிகாரிகள் தலைமையில் நடத்தப்பட்ட இந்த சோதனையின்போது ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை மடக்கி பிடித்து போலீசார் அபராதம் விதித்தனர். இதேபோன்று உரிய ஆவணங்கள் இன்றி வந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஓட்டுனர் உரிமம் இன்றி வந்தவர்களும், வாகனங்களுக்கான உரிய ஆவணம் இன்றி பயணித்தவர்களும் போலீசில் சிக்கினார்கள். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த சோதனையின்போது மோட்டார் சைக்கிளில் சென்றவர்களில் பலர் வாகனத்தை ஓட்டியவர்களும், பின்னால் அமர்ந்திருந்தவர்களும் ஹெல்மெட் அணிந்திருந்தனர் என்றும் இது வரவேற்கக்கூடிய விஷயம் தான் என்றும் போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
இதுபோன்று விதிகளை மதித்து வாகனங்களை ஓட்டி சென்றவர்களை கைகொடுத்து பாராட்டினார்கள்.
இந்த சோதனை சென்னை மாநகர் முழுவதும் இன்று மேற்கொள்ளப்பட்ட நிலையில் அனைத்து முக்கிய சாலைகள் மற்றும் பிரதான சாலைகளில் சிறப்பு தணிக்கை மற்றும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
பொதுமக்கள் போக்குவரத்து விதிகளைத் தவறாது கடைப்பிடிக்கவும், போக்குவரத்து சிக்னல்களை மதித்து நடக்கவும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தலைக்கவசம் அணியவும் 4 சக்கர வாகனங்களில் செல்பவர்கள் இருக்கைப் பட்டை அணியவும் போலீசார் கேட்டுக் கொண்டனர். அதிவேகமாகவும் ஆபத்தான முறையிலும் வாகனங்களை ஓட்டுவதைத் தவிர்க்கவும், வாகனம் ஓட்டும்போது செல்போன்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் கூறினர்.