கடை அடைப்பு போராட்டம்  
தமிழக செய்திகள்

வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோடு, ஜி.ஏ.ரோடு வியாபாரிகள் நாளை கடை அடைப்பு போராட்டம்

வியாபாரம் செய்யக்கூடிய பகுதி இல்லையென்று மாநகராட்சி அறிவித்துள்ள இடத்தில் வியாபாரிகள் கடைகளை வழியில் போட்டு வியாபாரம் செய்கிறார்கள்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் எம்.சி.ரோடு, ஜி.ஏ.ரோடு வியாபாரிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நீண்ட காலமாக தாமதமாக இருப்பதால் நாளை காலை 10 மணி முதல் 12.30 மணி வரை கடை அடைப்பு போராட்டம் நடத்த உள்ளனர். 2000 கடைகள் மற்றும் 20 ஆயிரம் ஊழியர்கள் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் எம்.சி.ரோடு, ஜி.ஏ.ரோடு எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும். வடசென்னை மக்களின் வியாபார தளமாக இது இருப்பதால் காலை முதல் இரவு வரை அப்பகுதியில் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.

கடையடைப்பு போராட்டம்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த சாலையை அழகுப்படுத்தும் பணி கடந்த 3 வருடங்களாக நடைபெற்று வருகிறது. இதனால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அங்குள்ள நடைபாதை வியாபாரிகளால் தங்களின் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது என்று அனைத்து கடை வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தை நடத்துகின்றனர்.

வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோடு, ஜி.ஏ.ரோடு சுற்றுவட்டார வியாபாரிகள் நல சங்கம் மற்றும் சென்னை கட்பீஸ் ஜவுளி வியாபாரிகள் சங்கம் ஆகியவை இணைந்து போராட்டத்தை நடத்துகின்றன.

இதுகுறித்து சங்க நிர்வாகி முகமது பாரூக் கூறியதாவது:-

ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் 18 மாதத்திற்குள் முடிக்கப்படுவதாக கூறினார்கள். ஆனால் 3 வருடமாக நடந்து வருகிறது. இதனால் அனைத்து வியாபாரிகளும் பாதிக்கப்படுகிறார்கள். நடைபாதையை வியாபாரிகள் ஆக்கிரமித்து கொள்வதால் எங்களது வியாபாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

வியாபாரம் செய்யக்கூடிய பகுதி இல்லையென்று மாநகராட்சி அறிவித்துள்ள இடத்தில் வியாபாரிகள் கடைகளை வழியில் போட்டு வியாபாரம் செய்கிறார்கள். இதனால் இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியவில்லை. நடைபாதை வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளை வாடகைக்கு விட்டு விட்டு இந்தப் பகுதியில் சாலையில் கடையை வைத்து வியாபாரம் செய்வதால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் நடைபாதை ஆக்கிரமித்து அந்த இடத்தையும் சிலர் வாடகைக்கு விடுகிறார்கள். இதையெல்லாம் மாநகராட்சி கண்டு கொள்வதில்லை.

இதை கண்டித்து நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் 12.30 மணி வரை கடைகளை மூடி ராபின்சன் பூங்கா அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். 2000 கடைகள் அங்குள்ளன. அதில் பணியாற்றும் 20 ஆயிரம் ஊழியர்கள் இத்தொழிலை நம்பி இருக்கிறோம். எனவே மாநகராட்சி ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT