தமிழக செய்திகள்

நச்சுத்தன்மையுள்ள 'ஊமத்தங்காய்' விற்பனை: அமேசான், இன்ஸ்டாமார்ட், பிக்பாஸ்கெட் உணவு உரிமங்கள் தற்காலிக ரத்து!

"ஊமத்தங்காய் உட்கொள்வது மனித உயிருக்குத் தீவிர ஆபத்தை விளைவிக்கும் என்றும், இது கோமா நிலைக்கு அல்லது உயிரிழப்பிற்கு வழிவகுக்கும்"

கர்நாடக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, முன்னணி ஆன்லைன் வணிக நிறுவனங்களான அமேசான், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மற்றும் பிக்பாஸ்கெட் ஆகியவற்றின் உணவு உரிமங்களை தற்காலிகமாக இடைநீக்கம் செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. மனிதர்கள் உண்பதற்குப் பொருத்தமற்ற, ஆபத்தான 'ஊமத்தங்காய்' மற்றும் அதன் விதைகளை உணவுப் பொருளாகத் தங்களது தளங்களில் காட்சிப்படுத்தி விற்பனை செய்ததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆபத்தான ஊமத்தங்காய் விற்பனை

பொதுமக்களிடம் இருந்து வந்த புகார்களின் அடிப்படையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், நச்சுத்தன்மை கொண்ட ஊமத்தங்காய் மற்றும் விதைகள், FSSAI உணவு பாதுகாப்பு உரிம எண்களுடன் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு, இந்த ஆன்லைன் நிறுவனங்களின் சேமிப்புக் கிடங்குகளில் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. ஊமத்தங்காய் உட்கொள்வது மனித உயிருக்குத் தீவிர ஆபத்தை விளைவிக்கும் என்றும், இது கோமா நிலைக்கு அல்லது உயிரிழப்பிற்கு வழிவகுக்கும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்ட நிலையில், அமேசான் நிறுவனம் எந்தவொரு முறையான பதிலும் அளிக்கவில்லை. ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் நிறுவனம் விளக்க ஆவணங்களைச் சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் கோரியது. பிக்பாஸ்கெட் நிறுவனம், ஊமத்தங்காய் விற்பனையை ஆன்லைனில் உடனடியாக நிறுத்திவிட்டதாகவும், இனிவரும் காலங்களில் 'மனித நுகர்வுக்கு உகந்தது அல்ல' என்ற எச்சரிக்கை லேபிளுடன் மட்டுமே மாற்றியமைக்கப்படும் என்றும் தெரிவித்தது.

இருப்பினும், இந்நிறுவனங்களின் பதில்கள் திருப்திகரமாக இல்லை எனக் கூறிய உணவு பாதுகாப்புத் துறை, ஆன்லைன் உணவு வணிக உரிமங்களை உடனடியாக இடைநீக்கம் செய்துள்ளது. மேலும், இந்த ஆன்லைன் தளங்களுக்கு ஊமத்தங்காய்களை விநியோகம் செய்த விற்பனையாளர்களின் உரிமங்களும் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட பொருட்கள் தொடர்பான விளம்பரங்கள் மற்றும் பட்டியல்களைத் தங்களது செயலிகளிலிருந்து உடனடியாக நீக்குமாறு அரசு கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.