பிரையண்ட் பூங்கா, நட்சத்திர ஏரி உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
சூப்பர் எல்நினோ தாக்கத்தால் அக்டோபர் மாத இறுதிவரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மலைப்பகுதிகளில் தண்ணீரின்றி நீரோடைகள் வறண்டது. மேலும் குடிநீர் தட்டுப்பாடு அபாயமும் உருவானது. வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் கொடைக்கானலில் கனமழை பெய்தது. இதனால் மலைப்பகுதிகளில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
மேலும் பல இடங்களில் சாலைகள் சேதமடைந்தன. குறிப்பாக அடுக்கம் சாலை கடுமையாக பாதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் மணல் மூட்டைகளை வைத்து சாலைகளை சீரமைத்தனர். தற்போது மழை ஓய்ந்த நிலையில் பனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நவம்பர் மாத தொடக்கத்திலேயே நடுங்க வைக்கும் குளிர் நிலவி வருகிறது. இதனால் வாரவிடுமுறையான இன்று சுற்றுலா பயணிகள் குறைவாகவே இருந்தது.
வெள்ளி நீர்வீழ்ச்சி, கோக்கர்ஸ் வாக், பசுமை பள்ளத்தாக்கு, தூண்பாறை, பைன்பாரஸ்ட், குணாகுகை, மோயர் பாயிண்ட், அப்சர்வேட்டரி, ரோஜா பூங்கா, பிரையண்ட் பூங்கா, நட்சத்திர ஏரி உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக பிரதான சாலை பகுதிகளில் சாலைகள் சேத மடைந்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது. இந்த சாலைகள் அனைத்தும் விரைவாக செயல்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளது. இருந்த போதும் கனமழை, சாலைகள் சேதம் என வதந்தி பரப்பி வருவதால் தற்பொழுது கொடைக்கானல் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. சேதமடைந்த சாலைகளை அரசுத் துறையினர் போர்க்கால அடிப்படையில் உடனடியாக சீரமைத்து, போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் சரிசெய்துள்ளனர்.
தற்போது இயல்பான சூழ்நிலையில் உள்ளதால் கொடைக்கானலுக்கு வருகை தர திட்டமிட்டுள்ள சுற்றுலா பயணிகள் எந்தவித தயக்கமும் இன்றி வழக்கம்போல் இங்கு வந்து, இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானலின் அழகையும், குளுமையான காலநிலையையும் அனுபவித்து செல்ல கொடைக்கானல் ஓட்டல் மற்றும் ரிசார்ட் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சுற்றுலா பயணிகளை வரவேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.