தமிழக செய்திகள்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை: மத்திய மந்திரி அமித்ஷாவுடன் நாளை கவர்னர் அர்லேகர் சந்திப்பு

கொலைகள் அதிகரித்து வரும் சூழலில் மறுபுறம் சிறுமி காணாமல் போன சம்பவங்களும் விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கின்றன.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை கவர்னர் அர்லேகர் நாளை சந்திக்கிறார். இந்த சந்திப்பில், தமிழகத்தின் தற்போதைய நிலைமை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை, கவர்னர் அர்லேகர் நாளை சந்திக்கிறார்.

கவர்னரிடம், சட்டம்- ஒழுங்கு நிலவரம் குறித்து, அமித்ஷா அறிக்கை கேட்டிருந்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.

சட்டம்-ஒழுங்கு

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப்பொறுப்பேற்று 6 மாதங்கள் நிறைவடைந்திருக்கின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு பிரச்சனை மிகவும் தீவிரமாக வெடித்திருக்கிறது.

அதிலும் தீபாவளி தினத்தன்று, (8-ந்தேதி) 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 11 கொலை சம்பவங்கள் பதிவாகி இருக்கின்றன. குறிப்பாக இந்த 11 பேரில் ஒரு சிறப்பு உதவி ஆய்வாளரும் அடங்குவார்.

ஒரே நாளில் 11 கொலைகள் என்பது, மிகவும் கவலைக்குரிய விஷயம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து இருக்கின்றன. கொலைகள் அதிகரித்து வரும் சூழலில் மறுபுறம் சிறுமி காணாமல் போன சம்பவங்களும் விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கின்றன. அதிலும் செஞ்சி சிறுமி இன்னும் கிடைக்கவே இல்லை.

இது தவிர, மாவட்ட பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக த.வெ.க. எம்.எல்.ஏ. மீது கிளம்பிய குற்றச்சாட்டு, சட்டசபை துணை சபாநாயகர் எம்.ரவிசங்கர் பொது பிரச்சனை சம்பந்தமாக பேச வந்த ஒருவரை சரமாரியாக தாக்கியதாக வந்த செய்தி உள்பட தமிழகம் மிகப்பெரிய விமர்சனத்தை எதிர் கொண்டிருக்கிறது.

அறிக்கை கேட்கும் உள்துறை

இப்படிப்பட்ட சூழ்நிலையில், தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை குறித்து தமிழக அரசிடம் அறிக்கை பெற்று தருமாறு கவர்னர் ஆர்.வி.அர்லேகருக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதனால்தான் முதலமைச்சர் விஜய் நேற்று தலைமை செயலகத்தில் 2-வது நாளாக போலீஸ் டி.ஜி.பி. மகேஷ் குமார் அகர்வால், உளவுத்துறை ஐ.ஜி.அஸ்ரா கார்க் ஆகியோருடன் சட்ட-ஒழுங்கு நிலவரம் பற்றியும் சமீபத்தில் நடைபெற்ற குற்ற சம்பவங்கள் குறித்தும் காவல்துறை மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகள் பற்றியும் விரிவாக கேட்டறிந்துள்ளார்.

இந்த நிலையில் தமிழக கவர்னர் அர்லேகர் நாளை காலை டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

அமித்ஷாவை சந்திக்கிறார்

டெல்லியில் நாளை மாலை உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது, தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்த விவரங்களை அமித்ஷாவிடம் கவர்னர் அர்லேகர் கொடுப்பார் என தெரிகிறது. அப்போது தமிழக நிலவரம் குறித்து விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமித்ஷாவை சந்தித்த பிறகு கவர்னர் அர்லேகர் ஜம்மு-காஷ்மீர் செல்கிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை (15-ந்தேதி) சென்னை திரும்புகிறார்.

SCROLL FOR NEXT