தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் நடந்து முடிந்தது. இத்தேர்வில் 25 சதவீதத்திற்கும் அதிகமானோர் பங்கேற்கவில்லை என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
துணை கலெக்டர் (12), வணிகவரி உதவி ஆணையர் (2), கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் (3), மாவட்ட பதிவாளர் (8), தொழிலாளர் உதவி ஆணையர் (1) என மொத்தம் 26 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூன் 23-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
விண்ணப்பிக்க ஜூலை 29 வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், இடையில் மேலும் 20 இடங்கள் சேர்க்கப்பட்டு மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்த்தப்பட்டது.
இத்தேர்வை எழுத 95,984 ஆண்கள், 1,27,441 பெண்கள், 15 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,23,440 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதற்காக தமிழகம் முழுவதும் 754 தேர்வு அறைகளும், சென்னையில் மட்டும் 128 மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன.
தேர்வு எழுதியவர்கள் 1,65,828 பேர் (74.22 சதவீதம்), ஆப்சென்ட் ஆனவர்கள்: 57,612 பேர் (25.78 சதவீதம்) என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
தேர்வு குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த TNPSC தலைவர் எஸ்.கே.பிரபாகர் பேசுகையில், குரூப்-1 முதல்நிலைத் தேர்வின் முடிவுகள் இன்னும் 2 மாதங்களுக்குள் வெளியிடப்படும். இந்த முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்த கட்டமாக முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். மேலும், முழுமையான தேர்வு முடிவுகள் வெளியாகும் போது காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.
இத்தேர்வின் முடிவுகள் நவம்பர் மாத இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்ப்பதால், தேர்வர்கள் தற்போதே முதன்மைத் தேர்வுக்குத் தயாராகத் தொடங்கியுள்ளனர்.