தமிழக செய்திகள்

மின்சார சேவை தொடர்பான புகார்களை தெரிவிக்க புதிய வசதி

தானியங்கி புகார் அளிக்கும் வசதியின் மூலம் பொதுமக்கள் மேலும் எளிதாகவும், விரைவாகவும் மின்சார சேவைகளை பெற ஏதுவாகும்.

மின்சார சேவை தொடர்பான புகார்களை தெரிவித்து தீர்வு காண புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

புதிய வசதி அறிமுகம்

மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தரவின்படியும், மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமாரின் அறிவுறுத்தலின்படியும் பொதுமக்களின் மின்சார சேவை தொடர்பான புகார்களை எளிதாக பதிவு செய்து, அவற்றை விரைவாகவும் காலதாமதமின்றியும் உரிய அலுவலர்களிடம் கொண்டு சேர்த்து விரைவான குறைதீர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் 24 மணி நேரமும் செயல்படும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம், பொதுமக்களுக்கு தடையற்ற மற்றும் சீரான மின்சாரத்தை வழங்குவதற்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு, மின்சார வினியோகம் உள்பட பல்வேறு சேவைகள் குறித்த புகார்களை எளிதாக அளிப்பதற்கும் உரிய வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நடவடிக்கையின் அடுத்தகட்டமாக, மின்சார சேவைகள் குறித்த புகார்களை விரைவாக கையாளுவதற்கும், அவற்றை உரிய அதிகாரிகளிடம் காலதாமதமின்றி கொண்டு சேர்த்து, குறித்த காலத்தில் தீர்வு வழங்குவதற்கும் ஏதுவாக 24 மணிநேரமும் செயல்படும் "TNEB CHATBOT" எனும் புதிய வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

உரிய நடவடிக்கைகள்

இந்த சேவையை பெற 'வாட்ஸ்-அப்' செயலியில் 94987 94987 என்ற எண்ணிற்கு 'HI" என பதிவிட வேண்டும். இதனையடுத்து செல்போன் எண் அல்லது மின் இணைப்பு எண் மூலம் புகார் குறித்த விவரங்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உடனடியாக அனுப்பப்பட்டு, புகாரை சீர் செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்த தானியங்கி புகார் அளிக்கும் வசதியின் மூலம் பொதுமக்கள் மேலும் எளிதாகவும், விரைவாகவும் மின்சார சேவைகளை பெற ஏதுவாகும். மின்சார சேவை தொடர்பான பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து, சிறப்பான மின்சார சேவையை வழங்குவதற்கு தொடர்ந்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT