தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை TNEA 2026 விண்ணப்பங்களுக்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்படுகிறது. தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் (DoTE) இந்த தகவலை அறிவித்துள்ளது. மாணவர்கள் தங்களுடைய 10 இலக்க தனித்துவமான ரேண்டம் எண்ணை TNEA அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்கள் உள்நுழைவு விவரங்களை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
TNEA சேர்க்கை செயல்பாட்டில் ரேண்டம் எண் என்பது மதிப்பெண்ணோ அல்லது ரேங்கோ அல்ல. இது சம மதிப்பெண் பெறும் மாணவர்களிடையே தரவரிசையை இறுதி செய்ய பயன்படுத்தப்படும் ஒரு இறுதி கட்ட சமன்முறிப்பான் ஆகும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்கள் பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஒரே கட்-ஆஃப் மதிப்பெண்களைப் பெறும்போது, தரவரிசையைத் தீர்மானிக்க பின்வரும் முன்னுரிமை விதிகள் படிப்படியாகப் பின்பற்றப்படும்.
அதில், கணிதத்தில் அதிக மதிப்பெண் பெற்றவருக்கு முன்னுரிமை வழங்கப்படும். கணிதத்திலும் சமமாக இருந்தால், இயற்பியலில் அதிக மதிப்பெண் பெற்றவருக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலேயுள்ள இரண்டிலும் சமமாக இருக்கும் பட்சத்தில், வேதியியல் மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படும். மதிப்பெண்கள் அனைத்தும் சமமாக இருந்தால், வயதில் மூத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மேற்கூறிய அனைத்து தகுதிகளும் சமமாக இருக்கும் பட்சத்தில், இந்த 10 இலக்க ரேண்டம் எண் பயன்படுத்தப்படும். இதில் யாருக்கு அதிக ரேண்டம் எண் உள்ளதோ, அவரே தரவரிசைப் பட்டியலில் முன்னிலைப் படுத்தப்படுவார்.
படி 1: முதன்மை இணையதள பக்கத்திற்குச் செல்லவும்: tneaonline.org
படி 2: முகப்புப் பக்கத்தில் உள்ள "Candidate Login" பொத்தானைக் கிளிக் செய்யவும்.
படி 3: உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி (Email ID) மற்றும் கடவுச்சொல்லை (Password) உள்ளிடவும்.
படி 4: உங்கள் தனிப்பட்ட கணக்கு பக்கத்தில் (Dashboard) உங்களுக்கான ரேண்டம் எண் காண்பிக்கப்படும்.
படி 5: எதிர்காலத் தேவைக்காக இதனைப் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.
ரேண்டம் எண் வெளியானதைத் தொடர்ந்து, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மாநில அளவிலான இறுதி தரவரிசைப் பட்டியலை தயார் செய்யும். அதன் பின்னர், ஆன்லைன் கவுன்சிலிங் தேதிகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.