தமிழக செய்திகள்

Congress | த.வெ.க.வுக்கு ஆதரவளிக்க தமிழக காங்கிரஸ் ஒருமனதாக முடிவு?

விஜய் தலைமையிலான த.வெ.க. கட்சி தமிழகத்தில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான த.வெ.க. கட்சி பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைப் பெறுவதற்கு 10 இடங்கள் குறைவாகப் பெற்றதைத் தொடர்ந்து, மாநிலத்தில் ஆட்சி அமைக்க தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவளிக்க தமிழக காங்கிரஸ் ஒருமனதாக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களை வென்றுள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு ஆதரவளிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி (TNCC) தலைவர் செல்வபெருந்தகை, கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மூத்த தலைவர்களுடன் நள்ளிரவில் காணொளிக் கூட்டம் ஒன்றை நடத்தியதாக தெரிகிறது.

தமிழக காங்கிரஸ் கட்சி வட்டார தகவல்களின் படி , நள்ளிரவில் நடைபெற்ற கூகுள் மீட் கூட்டத்தில், தமிழகத்தில் உருவாகி வரும் அரசியல் சூழல் மற்றும் த.வெ.க.-வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

முன்னதாக, தமிழகத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சியின் ஆதரவை த.வெ.க. தலைவர் விஜய் கோரியதை காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் உறுதிப்படுத்தி இருந்தார். இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க தமிழக காங்கிரஸ் குழுவிற்கு கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.