தமிழக செய்திகள்

TN Rains: விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

மழையால் தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சில பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அந்தமான் அருகே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற கூடும் எனவும், அடுத்து உருவாகும் புயலுக்கு ‘அர்னாப்’ என பெயர் சூட்டப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.

விடுமுறை

இந்நிலையில் இன்று (அக்டோபர் 23 - வெள்ளிக்கிழமை) விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

திருவண்ணாமலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் காஞ்சிபுரத்தில் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அமைச்சர் நமசியவாயம் உத்தரவிட்டுள்ளார்.

மழை

தமிழகத்தில் உள்ள 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோவை ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 24 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, அரியலூர், கடலூர், விழுப்புரம், திருப்பூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 7 மாவட்டங்களில் இடி, மின்னல் தாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், கடலூர், ஈரோடு, திருப்பூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் தாக்கும் அபாயம் உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT