தமிழகத்தில் இன்று காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட திருச்செந்துரை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக இந்து சமய அறநிலை துறை அமைச்சர் ரமேஷ் திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களோடு அமர்ந்து உணவருந்தினார். இந்த நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக், மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தயாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை அமைச்சர் ரமேஷ் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
திருச்சி மாவட்டத்தில் உள்ள 590 பள்ளிகளில் 63,157 மாணவர்கள் பயன்பெறும் வகையில் இன்று காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. திமுக ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் மீது கோயில் நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்துள்ளதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு திட்டமிட்டே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அப்படி இருந்தால், அவர் ஏன் முன்ஜாமின் கோரி நீதிமன்றத்தை நாடி உள்ளார். உண்மை இருந்தால் அதை அவர் நேரடியாக சந்திக்கலாம். ஏன் அவசர அவசரமாக முன்ஜாமின் வாங்குகிறார்.
விசாரணை செய்ய உள்ளோம் எனக் கூறுவதற்கே அவர் முன் ஜாமின் வாங்குகிறார். எங்கே தவறு இருக்கிறதோ அங்கே பயமிருக்கிறது, அதனால்தான் இது போன்று அவர்கள் செய்து வருகிறார்கள்.
நான் திருவண்ணாமலையில், முன்னாள் அமைச்சர் சேகர்பாபு பொது தரிசன வழியில் சென்றது குறித்து பேசியதையும், மதுரையில் பேசியது குறித்தும் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு விமர்சனம் செய்துள்ளார். ஆப்பிளையும் ஆப்பிளையும் ஒப்பிடலாம். ஆப்பிளையும் ஆரஞ்சையும் எப்படி ஒப்பிட முடியும். இவர்களுக்கு அடிப்படை அறிவே கிடையாது.
மதுரை கும்பாபிஷேகத்தில் பல வேலைகள் இருந்ததால் ஏற்பாடுகளை கவனிக்க நாங்கள் வி.ஐ.பி. தரிசன வழியில் சென்றோம். சாதாரண நாட்களில் வி.ஐ.பி. தரிசன வழியில் செல்வது குறித்து பேசினால் அவர் கும்பாபிஷேக நாளில் வி.ஐ.பி. தரிசனம் வழியில் செல்வது குறித்து பேசுகிறார்.
கும்பாபிஷேக விழாவில் சிலரை எம்.எல்.ஏ. ஒருவர் அழைத்துச் சென்றது தொடர்பாக அவர் விளக்கம் அளித்துள்ளார். சட்டமன்றத்தில் பாட்டு பாடுகிறார்கள், பாட்டு பாடுகிறார்கள் எனக் கூறிக்கொண்டே மூன்று மாதமாக எதிர்க்கட்சித் தலைவர் பாட்டு பாடி வருகிறார்.
சட்டப்பேரவைக்கு வந்து கிளாசை கவனித்தால் யார் அமைச்சர் யார் எம்.எல்.ஏ. என்பது தெரியும். ஆனால் கிளாசை கட் அடித்து விட்டு சென்று விடுவதால் அப்படித் தெரியவில்லை. முன்னாள் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின், திருமணம் காதுகுத்து போன்ற நிகழ்ச்சிகளில் அவருக்கு எழுதித்தரும் வசனங்களை பேசி வருகிறார்.
இவ்வாறு அமைச்சர் ரமேஷ் பேசினார்.