18 முதல் 65 வயது வரை உள்ள தகுதியுடைய அனைவரும் தன்னார்வமாக ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ந்தேதி தேசிய தன்னார்வ ரத்த தான தினமாக அனுசரிக்கப்படுகிறது. தன்னார்வமாக ரத்த தானம் செய்வதன் முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் எடுத்துரைத்து, தொடர்ந்து ரத்த தானம் செய்யும் பழக்கத்தை ஊக்குவிப்பதே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும். இந்த ஆண்டிற்கான தேசிய தன்னார்வ ரத்த தான தினத்தின் மையப்பொருள் "மனிதநேயத்தின் ஒரு துளி ரத்தம் கொடுங்கள். உயிர்களைக் காப்பாற்றுங்கள்" என்பதாகும்.
2025-2026-ம் ஆண்டில் 359 ரத்த மையங்கள் மூலம் 9,53,638 ரத்த அலகுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அரசு ரத்த மையங்கள் மூலம் 4,874 தன்னார்வ ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. சேகரிக்கப்படும் முழு ரத்தம் தேவைக்கேற்ப ரத்தக் கூறுகளாகப் பிரிக்கப்பட்டு பல நோயாளிகள் பயன்பெறுகிறார்கள். பிரிக்கப்பட்ட சிவப்பணுக்கள் 35 முதல் 42 நாட்கள் வரையும், பிளாஸ்மா கூறுகள் ஒரு ஆண்டு வரையும் உரிய முறையில் சேமித்து பயன்படுத்த முடியும். எனவே, ஒரு ரத்த தானம் பல கூறுகளாக பிரிக்கப்பட்டு ஓராண்டு வரை பல உயிர்களைக் காக்கும் உன்னதமான மனிதநேயச் செயலாக அமைகிறது.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற உடன் தன்னார்வ ரத்த தானத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், சட்டமன்றத்தில் 3 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதாவது, தமிழ்நாடு அரியவகை ரத்தப் பிரிவு கொடையாளர் பதிவேடு உருவாக்குதல், மாவட்ட அளவில் ஆண்டு தன்னார்வ ரத்த தான முகாம் அட்டவணை உறுதிப்படுத்துதல், கல்லூரிகளில் ரத்தக் கொடையாளர் மன்றங்கள் உருவாக்குதல் ஆகிய அறிவிப்புகள் ஆகும். இதன் மூலம் அறிய ரத்தப் பிரிவு கொண்ட நோயாளிகளுக்குத் தேவையான நேரத்தில் ரத்தம் கிடைப்பதும், மாநிலம் முழுவதும் தன்னார்வ ரத்த தான இயக்கம் ஒருங்கிணைக்கப்படுவதும் உறுதி செய்யப்படும்.
மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 1 சதவிகித மக்களுக்கு தேவைப்படும் ரத்த அலகுகள் இருப்பை உறுதி செய்வதை இலக்காக கொண்டு, தன்னார்வ ரத்த தானத் திட்டங்களை வலுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, 18 வயது முதல் 65 வயது வரை உள்ள ரத்த தானம் செய்யத் தகுதியுடைய அனைவரும் தன்னார்வமாக ரத்த தானம் செய்ய முன்வந்து, உயிர்காக்கும் இந்த உன்னத சேவையில் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.