தமிழக செய்திகள்

சிறுவாணி அணை நீர் கசிவை சரி செய்ய ரூ.18 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு உத்தரவு

சீரமைப்புப் பணிகளை கேரள அரசின் நீர்ப்பாசனத்துறை மேற்கொள்ளும். இதற்கான செலவினத்தை தமிழக அரசு ஏற்கும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவாணி அணையில் நீர் கசிவைத் தடுக்க ரூ.18 கோடி ஒதுக்கீடு செய்து, பிரெஷரைஸ்டு சிமெண்ட் கிரவுட்டிங் தொழில்நுட்பம் மூலம் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கோவை மாநகரின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய நீர் ஆதாரமான சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவைத் தடுக்கவும், அணையின் கட்டமைப்பை வலுப்படுத்தவும் ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சிறுவாணி அணையை அண்மையில் ஆய்வு செய்த போது, அணையின் சுவர் வழியாக நீர் கசிவு ஏற்பட்டு வருவது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கேரள நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர், மத்திய நீர் மற்றும் மின் ஆராய்ச்சி நிலையத்தின் புனே நிபுணர்கள் குழுவும் ஆய்வு செய்து தொழில்நுட்ப மதிப்பீட்டை அளித்தது.

ஆய்வில், அணையின் சுவர் வழியாக சுமார் 10 மில்லியன் லிட்டர் அளவிற்கு நீர் கசிவு ஏற்படுவதாகவும், தொடர்ந்து ஏற்படும் கசிவு அணையின் நீர் சேமிப்பு அளவைக் குறைப்பதுடன், கோடை காலத்தில் கோவை மாநகரில் குடிநீர் பற்றாக்குறைக்கு வழிவகுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சீரமைக்க ரூ.18 கோடி

இதையடுத்து, அணையின் கட்டமைப்பை வலுப்படுத்தவும், நீர் கசிவைத் தடுக்கவும் பிரெஷரைஸ்டு சிமெண்ட் கிரவுட்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டது.

இந்தப் பணிகளுக்காக ரூ.18 கோடி நிர்வாக மற்றும் நிதி ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. சீரமைப்புப் பணிகளை கேரள அரசின் நீர்ப்பாசனத்துறை மேற்கொள்ளும். இதற்கான செலவினத்தை தமிழக அரசு ஏற்கும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பணிகளுக்கான விரிவான மதிப்பீட்டை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சரிபார்க்க வேண்டும் என்றும், சீரமைப்புப் பணிகள் மூலம் சிறுவாணி அணையின் நீர் கசிவு கட்டுப்படுத்தப்பட்டு, கோவை மாநகரின் குடிநீர் விநியோகம் நிலையானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT