தமிழக செய்திகள்

கடல்சார் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக மத்திய அரசிடம் ரூ.9,618 கோடி நிதி கோரியது தமிழ்நாடு அரசு

மிக முக்கியமான மற்றும் ஒப்பீட்டளவில் குறைந்த செலவிலான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு, தனது கடற்கரை பகுதிகள் மற்றும் நீர்வழித்தடங்களை சுற்றுலா மையங்கள், பயணிகள் வழித்தடங்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துப் பாதைகளாக மாற்ற திட்டமிட்டுள்ளது. இதற்காக மத்திய அரசிடம் ரூ.9,618 கோடி நிதியுதவியை மாநில அரசு கோரியுள்ளது.

துறைமுகங்கள் வளர்ச்சி

சென்னை - புதுச்சேரி கடற்கரையோர நடைபாதைகள் முதல் ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையிலான பயணிகள் படகு போக்குவரத்து வரை, 'சாகர்மாலா 2.0' திட்டத்தின் கீழ் துறைமுகங்கள் சார்ந்த வளர்ச்சியை வலுப்படுத்தும் மாநில அரசின் விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாக இவை அமைந்துள்ளன. இத்திட்டங்களுக்கு நிதியுதவி கோரி, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா புதுடெல்லியில் மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்தா சோனோ வாலை நேரில் சந்தித்து பேசினார்.

முன்னதாக தமிழ்நாடு அரசு தரப்பில் ரூ.1.05 லட்சம் கோடி மதிப்பிலான திட்ட வரைவுகளை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது மிக முக்கியமான மற்றும் ஒப்பீட்டளவில் குறைந்த செலவிலான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடற்கரை நடைபாதை

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு தேவைப்படும் முக்கிய திட்டங்களில், சென்னை மெரினா, மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரியில் கடற்கரை நடைபாதைகள் அமைத்தல் மற்றும் பயணிகள் படகு சேவை தொடங்குவதற்கு ரூ.900 கோடியும், பக்கிங்ஹாம் கால்வாய் சீரமைப்பிற்கு ரூ.2,700 கோடியும் கோரப்பட்டுள்ளது. மேலும், ராமேஸ்வரம் துறைமுகத்தில் ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையிலான சர்வதேச பயணிகள் படகுச் சேவைக்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.118 கோடியும், கடலூரில் பசுமைவெளி ஆழ்கடல் துறைமுகம் அமைக்க ரூ.2,700 கோடியும், பாம்பன் கால்வாயை ஆழப்படுத்த ரூ.1,200 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யக் கோரப்பட்டுள்ளது.

இத்திட்டங்களில் ஒன்றான சென்னை - புதுச்சேரி கடற்கரை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கிய இப்பகுதியை மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, சென்னை மெரினா கடற்கரை, மாமல்லபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பொம்மையார்பாளையம் கடற்கரை ஆகிய இடங்களில் கடற்கரை நடைபாதைகள், நுழைவு வளாகங்கள் மற்றும் படகு துறைகளை அமைக்க மாநில அரசு முன்மொழிந்துள்ளது. அத்துடன், சென்னையையும் புதுச்சேரியையும் இணைக்கும் அதிவேக பயணிகள் படகு சேவைக்கும் நிதியுதவி கோரப்பட்டுள்ளது.

சரக்கு போக்குவரத்து

அடுத்ததாக, 181 கி.மீ. நீளமுள்ள பக்கிங்ஹாம் கால்வாயை தூர்வாரி சீரமைத்து போக்குவரத்திற்கு ஏற்றதாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக முட்டுக்காடு மற்றும் மாமல்லபுரம் போன்ற முக்கிய இடங்களில் நவீன முனையங்கள் மற்றும் படகு துறைகள் அமைக்கப்படும். இத்திட்டம் நீர் மெட்ரோ சேவைகளையும், சென்னை, காட்டுப்பள்ளி மற்றும் எண்ணூர் துறைமுகங்களுக்கான இணைப்பையும் உள்ளடக்கியது. இதன் மூலம் பன்முக சரக்குப் போக்குவரத்திற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும். இக்கால்வாய் சுற்றுலா மற்றும் பாரம்பரிய வழித்தடங்களுக்குப் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்தேச நீர் மெட்ரோ திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ள சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒப்பந்தப்புள்ளி கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், கடலூரில் தற்போதுள்ள துறைமுகத்திற்கு சுமார் 5 கி.மீ. தெற்கே 1,200 ஏக்கர் பரப்பளவில் பசுமைவெளித் துறைமுகம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையிலான பயணிகள் படகு சேவையின் மூலம் இலங்கையுடனான வரலாற்று சிறப்புமிக்க கடல்சார் தொடர்பை மீண்டும் புதுப்பிக்கவும் மாநில அரசு விரும்புவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT