தமிழக அரசு 
தமிழக செய்திகள்

மகளிர் உரிமைத் தொகை பயனாளிகள் பெருமளவில் நீக்கமா?: உண்மை நிலை என்ன?- தமிழக அரசு விளக்கம்

இந்த மாதத்துக்கான உரிமைத் தொகை 1 கோடியே 29 லட்சத்து 97 ஆயிரத்து 568 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் கடந்த 14-ந்தேதி வரவு வைக்கப்பட்டுள்ளது.

மகளிர் உரிமைத் தொகை பயனாளிகள் பெருமளவில் நீக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறானது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தகுதியான பயனாளிகளுக்கு மாதம் ரூ.1000 நிதி உதவி தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும், எந்தவொரு சிறப்பு நீக்க நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

மகளிர் உரிமைத் தொகை பயனாளிகள் பெருமளவில் நீக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை தமிழக அரசு மறுத்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட விளக்கத்தில் கூறியிருப்பதாவது:-

மகளிர் உரிமைத் தொகை

மகளிர் உரிமைத் தொகையை பொறுத்தமட்டில் முதல் மற்றும் 2-ம் கட்டங்களில் சேர்க்கப்பட்ட தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் மாதம் தோறும் ரூ.1000 நிதி உதவி அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இந்த மாதத்துக்கான உரிமைத் தொகை 1 கோடியே 29 லட்சத்து 97 ஆயிரத்து 568 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் கடந்த 14-ந்தேதி வரவு வைக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற சூழ்நிலையில் 2-ம் கட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட 17 லட்சம் பயனாளிகளில் 50 சதவீதம் பேர் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானதாகும்.

உண்மைக்கு புறம்பானது

2-ம் கட்ட பயனாளிகளை பெருமளவில் நீக்கும் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அதற்கென எந்தவொரு சிறப்பு நீக்க நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

பயனாளிகள் யாரேனும் இறந்திருந்தாலோ, திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியற்றவர்களாக மாறியிருந்தாலோ அல்லது தாங்களாகவே திட்டத்தில் இருந்து விலக விருப்பம் தெரிவித்திருந்தாலோ அத்தகைய விவரங்களின் அடிப்படையில் பயனாளிகளின் பட்டியல் ஒவ்வொரு மாதமும் உரிய முறையில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

மகளிர் உரிமைத்தொகை பயனாளிகள் பெருமளவில் நீக்கம் என்ற தகவலில் எந்தவித உண்மையும் இல்லை. இந்த தகவல் உண்மைக்கு புறம்பானது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT