தமிழக செய்திகள்

காத்திருப்போர் பட்டியல் To லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் - அருண் ஐபிஎஸ் நியமனம் சர்ச்சையாவது ஏன்?

சென்னை மாநகர காவல் ஆணையர் பதவியில் இருந்து அருண் விடுக்கப்பட்டு, காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களை வென்ற தமிழக வெற்றிக் கழகம், திமுக கூட்டணியில் அங்கம் வகித்த கம்யூனிஸ்ட், விசிக, காங்கிரஸ் ஆதரவின் மூலம் ஆட்சி அமைத்தது.

மே 10 விஜய் முதல்வர் ஆனது முதல் நிர்வாக ரீதியாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பல்வேறு ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனராக, சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுக ஆட்சியில் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்தபோது தவெக பிரசாரத்திற்கு அருண் ஐபிஎஸ் முட்டுக்கட்டை போட்டதாக அக்கட்சியினரே தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தனர்.

அருண் ஐபிஎஸ் விதித்த கட்டுப்பாடுகள், கெடுபிடிகள் காரணமாகவே பல நேரங்களில் விஜய் பாதியிலேயே பரப்புரையை முடிக்க வேண்டியதாக இருந்தது எனவும் திமுக தூண்டுதலின் பேரில் அருண் ஐபிஎஸ் செயல்படுகிறார்கள் எனவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. மேலும் பல குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக சென்னை மாநகர காவல் ஆணையர் பதவியில் இருந்து அருண் விடுக்கப்பட்டு, புதிய ஆட்சி அமைந்ததும் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத திருப்பமாக தவெக அரசு அவரை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக நியமனம் செய்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதன் பின்னால் முதல்வர் விஜய்க்கு யாரேனும் அழுத்தம் கொடுத்தார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.