தமிழக செய்திகள்

எம்.பி.- எம்.எல்.ஏ.க்களுக்கு பிரதான இடத்தில் இடம் ஒதுக்க வேண்டும்- தமிழக அரசு சுற்றறிக்கை

உள்ளூர் பத்திரிகை நிருபர்கள் மன்ற நிகழ்வுகளை கவனிப்பதற்கு போதுமான இட வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் ககன் தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக அரசு வெளியிட்ட சுற்றறிக்கையில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி மன்றங்களில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு பிரதான இடத்தில் இருக்கை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேயர், துணை மேயர் மற்றும் ஆணையர்களுக்கு உயர் பீடத்தில் இருக்கைகள் அமைக்க வேண்டும் எனவும் தெளிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி மன்றக் கூட்டங்களில் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு பிரதான இடத்தில் இருக்கை ஒதுக்க வேண்டும் என தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத்துறை முதன்மைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இருக்கைகள்

நகராட்சி நிர்வாக இயக்குனர் மற்றும் பேரூராட்சிகளின் இயக்குனர்களுக்கு அவர் அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மன்றங்களில் அமைக்கப்பட வேண்டிய இருக்கைகள் குறித்த தெளிவுரைகளை வழங்கியுள்ளார்.

அதன்படி மேயர், நகர் மன்றத் தலைவர், பேரூராட்சிகளின் தலைவர் ஆகியோருக்கு உயர் பீடத்தில் இருக்கை அமைக்க வேண்டும் எனவும், அவருக்கு இடதுபுறம் துணை மேயர், துணைத்தலைவருக்கும், வலது புறம் ஆணையர்களுக்கும் இருக்கைகள் அமையப்பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்

மேலும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அமர்வதற்கு வசதியாக மன்றக் கூட்டத்தின் பிரதான இடத்தில் இருக்கை அமைக்கப்பட வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள் மன்ற அரங்கில் அமர்ந்து கூட்ட நடவடிக்கைகளை பார்க்கும் வகையில் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உள்ளூர் பத்திரிகை நிருபர்கள் மன்ற நிகழ்வுகளை கவனிப்பதற்கு போதுமான இட வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் ககன் தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT