தமிழக செய்திகள்

"நிழல் முதல்வர் ஆதவ் அர்ஜுனா.. ஆணவத்திலும், அடக்குமுறையிலும் திமுகவையே மிஞ்சிய தவெக" - நயினார் நாகேந்திரன்

திமுகவிடம் ட்ரெய்னிங் எடுத்துக் கொண்ட ஆதவ் அர்ஜுனா அவர்களை இனியும் நிழல் முதல்வராகத் தொடர அனுமதித்தால், தமிழக மக்களின் பெருங்கோபத்தை அவர்கள் சந்திக்க நேரிடும்

தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து 3 தனியார் செய்தி சேனல்கள் முடக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

"ஆணவத்திலும், அடக்குமுறையிலும் திமுகவையே மிஞ்சியது தவெக. விஜய் தலைமையிலான “ரீல்ஸ் மாடல்” அரசுக்கு எதிரான செய்திகளை, உண்மைக் கள நிலவரங்களை மக்களிடையே கொண்டு சேர்த்தமைக்காக பாலிமர் நியூஸ், நியூஸ் தமிழ் 24x7 மற்றும் தமிழ் ஜனம் நியூஸ் ஆகிய சேனல்கள் தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.

விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாத தவெக அரசின் இந்த அப்பட்டமான அடக்குமுறை கடும் கண்டனத்திற்குரியது. பல நூறாண்டு காலம் நாம் போராடி பெற்ற கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது.

தாங்கள் நினைப்பது மட்டுமே செய்திகளாக ஒலிக்க வேண்டும், தங்களுக்கு பிடித்தவைகள் மட்டுமே காட்சிகளாகப் பதிய வேண்டும் என்ற நோக்கத்தில், தங்களுக்கு எதிராக பேசும் சமூக ஊடகவியலாளர்கள் முதல் செய்தி சேனல்கள் வரை அனைவரையும் முடக்க நினைக்கும் தவெக, மற்றொரு “தீயசக்தி”யாக மெல்ல மெல்ல வலுப்பெற்றுக் கொண்டிருக்கிறது.

காரணம், முந்தைய திமுக ஆட்சியிலும் பத்திரிக்கைகளின் குரல்வளை நெறிக்கப்பட்டது. “இம் என்றால் வனவாசம், ஆம் என்றால் சிறைவாசம்” என்ற நிலை தான் இருந்தது.

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதற்கேற்ப தற்போதைய தவெக ஆட்சியிலும் ஊடகச் சுதந்திரம் முடக்கப்படுவது தமிழகத்திற்கு பேராபத்தானது.

எனவே, தமிழக மக்கள் ஒழித்துக் கட்ட நினைத்த திமுகவிடம் ட்ரெய்னிங் எடுத்துக் கொண்ட ஆதவ் அர்ஜுனா அவர்களை இனியும் நிழல் முதல்வராகத் தொடர அனுமதித்தால், தமிழக மக்களின் பெருங்கோபத்தை அவர்கள் சந்திக்க நேரிடும் என்பதை எச்சரிக்கையாகவே தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.