தமிழக அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்யும் கால அவகாசம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஊழலை ஒழிக்கவும், பினாமி சொத்துச் சேர்ப்பை தடுக்கவும் மேற்கொள்ளப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. காலக்கெடுவை மீறுவோர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதில் இருந்து அரசுத் துறைகளில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
தமிழக அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கக்கூடாது என்றும், ஊழல் விவகாரங்களில் சிக்ககூடாது எனவும் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் அதுபற்றி புகார் அளிக்க வாட்ஸ் அப் எண் வெளியிடப்பட்டது.
அரசுத் துறைகளில் லஞ்சம் மற்றும் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை ஒழிப்பதற்காக, அரசு ஊழியர்களின் பணியிட மாற்றங்கள் மற்றும் நியமனங்கள் அனைத்தும் முழுமையாக இணையவழி முறைக்கு மாற்றப்பட்டுள்ளன.
அரசியல் தலையீடுகள் இன்றி அதிகாரிகள் சுதந்திரமாகச் செயல்பட தன்னாட்சி வழங்கப்பட்டுள்ளது. மேலும், நிர்வாகத் தேக்க நிலையைத் தவிர்க்க கோப்புகள் விரைவாகத் தீர்க்கப்படுவதை முதலமைச்சர் விஜய் உறுதி செய்துள்ளார்.
அரசு அதிகாரிகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கட்டாயம் அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்ற விதிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
வருவாய் மற்றும் கூட்டுறவு போன்ற முக்கியத் துறைகளில் நிலவும் முறையற்ற செயல்பாடுகள் மற்றும் திறமையின்மைகளை கண்டறிய முதலமைச்சர் விஜய் நேரடியாகத் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். தவறு செய்யும் அதிகாரிகள் மீது உடனடி ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்கவும், பினாமி சொத்துச் சேர்ப்பைத் தடுக்கவும் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
அதன்படி, தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களின் அசையும், அசையா சொத்துகள், சேமிப்பு, கடன் உள்ளிட்ட அனைத்து சொத்து விவரங்களையும் தமிழக அரசின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பு இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
சொத்து விவரங்களைத் தாக்கல் செய்யும் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும் என்று அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விவரங்களைச் சமர்ப்பிக்காத ஊழியர்களின் பெயர்கள், பதவி உயர்வுக்கான தகுதிப் பட்டியலில் இருந்து உடனடியாக நீக்கப்படும்.
வேறு யார் பெயரிலும் அரசு ஊழியர்கள் சொத்துகள் வாங்கியிருந்தாலும் அவற்றையும் குறிப்பிட்டு அந்த நபருக்கும், அரசு ஊழியருக்கும் என்ன உறவு என்பதையும் குறிப்பிட வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் சொத்து மதிப்புகளை தாக்கல் செய்யும் அரசு ஊழியர்கள் பெயர்கள் தான் பதவி உயர்வுக்கான பட்டியலில் இடம்பெறும்.
இந்த உத்தரவை மதிக்காமல் சொத்து விவரங்களை மறைப்பவர்கள் அல்லது தாக்கல் செய்யத் தவறுபவர்கள், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகள், 1973”-ஐ மீறியவர்களாகக் கருதப்பட்டு, அவர்கள் மீது துறை ரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் பாயும் எனத் தலைமைச் செயலாளர் மூலமாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதற்கான முதற்கட்ட இறுதி நாளாக இன்று (அக்டோபர் 31) நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனினும், அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று மற்றும் அனைத்து ஊழியர்களும் பதிவேற்றம் செய்வதை உறுதி செய்ய, இந்த அவகாசத்தை வருகிற டிசம்பர் 31 வரை நீட்டித்து தமிழக அரசு தற்போது புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.