வெளிச்சந்தையில் இருந்து அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை மொத்தம் 17 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய 5-வது குறுகியகால டெண்டரை தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2027) கோடை காலத்தில் ஏற்படக்கூடிய உச்சபட்ச மின்தேவையை சமாளிப்பதற்காக 2 ஆயிரம் முதல் 3 ஆயிரத்து 500 மெகாவாட் வரையிலான மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு மின்சார பகிர்மான கழகம் டெண்டர் வெளியிட்டுள்ளது.
அந்த வகையில், 2027-ம் ஆண்டு ஜனவரி மாதம் 18-ந்தேதியில் இருந்து ஜூன் மாதம் 15-ந்தேதி வரை குறுகிய கால அடிப்படையில் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கு டெண்டர் வெளியிட்டுள்ளது.
அதன்படி நிலக்கரி அடிப்படையிலான அனல்மின் நிலையங்களில் இருந்து மட்டும் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த மின்சாரம் மாதவாரியாக கொள்முதல் செய்யப்படுகிறது. அதன்படி, மின்சாரத்தின் அளவை பொறுத்தவரை ஜனவரி 18-ந்தேதியில் இருந்து 31-ந்தேதி வரை 2 ஆயிரம் மெகாவாட், பிப்ரவரி மாதத்தில் 3 ஆயிரம் மெகாவாட், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் தலா 3 ஆயிரத்து 500 மெகா வாட், மே மற்றும் ஜூன் மாதத்தில் தலா 2,500 மெகாவாட் என்ற அளவில், ஜனவரி முதல் ஜூன் வரை வெளிச்சந்தையில் இருந்து மொத்தம் 17 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய குறுகியகால ஒப்பந்தத்தின் அடிப்படையில் டெண்டர் வெளியிடப்பட்டு இருக்கிறது.
வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு 5-வது டெண்டரை தற்போது வெளியிட்டுள்ளது.
இந்த டெண்டருக்கு பல்வேறு நிபந்தனைகளும் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு மின்சார உற்பத்தி நிலையமும் குறைந்தபட்சம் 20 மெகாவாட் மின்சாரத்தை வழங்க வேண்டும். மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான மின்சார உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் தகுதி பெற்ற மின்சார வர்த்தக நிறுவனங்கள் மட்டுமே இந்த டெண்டரில் பங்கேற்கலாம். அதேபோல் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட மின்சாரத்தை மீண்டும் இந்த டெண்டரில் வழங்க முடியாது. ஒரு மெகாவாட்டுக்கு மாதத்திற்கு ரூ.30 ஆயிரம் வீதம் முன்வைப்பு தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனம் இ.எம்.டி. என்ற அடிப்படையில் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் மின்சார சேவையை கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையில் பல்வேறு கட்டங்களாக மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் நடவடிக்கை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.