பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் 4 ஆயிரத்து 48 டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு நாளைக்கு ரூ.130 கோடி முதல் ரூ.150 கோடி வரையிலும், வார இறுதி நாட்களில் ரூ.200 கோடி வரைக்கும் மது விற்பனை நடக்கிறது. பண்டிகை காலங்களில் மதுப்பிரியர்கள் உற்சாகத்தில் திளைப்பார்கள் என்பதால் அப்போது மது விற்பனை படுஜோராக இருக்கும்.
அந்த வகையில், தீபாவளி பண்டிகையையொட்டி மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடையை திறப்பதற்கு முன்பாகவே குவிந்தனர். மதுப்பிரியர்களின் உற்சாக மிகுதியால் 7-ந்தேதி (சனிக்கிழமை) அன்று ரூ.234 கோடியே 75 லட்சத்துக்கும், தீபாவளி பண்டிகையன்று (ஞாயிற்றுக்கிழமை) ரூ.206 கோடியே 63 லட்சத்துக்கும் என 2 நாட்களில் சுமார் ரூ.441 கோடியே 38 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.
சென்னையில் தீபாவளி பண்டிகை அன்று வடசென்னையில் சில டாஸ்மாக் கடைகளில் இரவு 9 மணிக்கு முன்பாகவே மதுபானங்கள் விற்று தீர்ந்துள்ளது.
டாஸ்மாக் நிர்வாகம் 5 மண்டலங்களாக இயங்கி வருகிறது. இதில் தீபாவளி மது விற்பனையில் திருச்சி மண்டலம் முதலிடம் பிடித்துள்ளது. திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்கள் அடங்கிய இந்த மண்டலத்தில் ரூ.98 கோடியே 97 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையாகி இருக்கிறது.
இதற்கிடையே, தீபாவளி பண்டிகையின்போது, தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நடந்த மோதல்கள் மற்றும் கொலைச் சம்பவங்களால் பதற்றம் ஏற்பட்டது. தீபாவளி நாளில் தமிழ்நாட்டில் 8 கொலைகள் நடந்ததாக தமிழ்நாடு காவல்துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இதையடுத்து சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து அரசை எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.