ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்லும்போது எல்லைதாண்டி வந்ததாக அவர்களை இலங்கை கடற்படை தாக்கி விரட்டி அடிப்பதும், பல நேரங்களில் விசை படகுகளுடன் சிறை பிடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை 110-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதே போல் 210 விசை படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தம், போராட்டம் உள்ளிட்டவற்றை நடத்தி வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மத்திய அரசுக்கு கடிதம் மூலம் கோரிக்கை வைத்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று ராமேசுவரத்தை சேர்ந்த 2 மீனவர்கள் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்றனர். அவர்கள் இன்று அதிகாலை இந்திய கடல் எல்லையை ஒட்டியுள்ள கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி விசை படகுடன் 2 பேரையும் சிறை பிடித்து சென்றனர்.
மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்ட அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு இன்று பிற்பகலில் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
2 மீனவர்கள் சிறை பிடிப்பு சம்பவம் ராமேசுவரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.