தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (மே 04) எண்ணப்படுகின்றன. இதற்காக தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
தி.மு.க. மீண்டும் ஆட்சியை தக்கவைத்து வரலாறு படைக்குமா? அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுமா? தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஆட்சியைப் பிடிப்பாரா? அல்லது எதிர்க்கட்சித் தலைவராக சட்டமன்றத்திற்குள் நுழைவாரா? என்ற கேள்விகளுக்கு இன்று பதில்கள் கிடைத்துவிடும்.
இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில், காலை 6 மணி முதலே வாக்கு எண்ணும் பணியாளர்கள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் வேட்பாளர் முகவர்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர். அவர்களின் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு, வாக்குகள் எண்ணப்படும்.
காலை 11 மணி முதல் முன்னிலை நிலவரங்கள் தெளிவாக தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ முடிவுகள் மாலை முதல் நள்ளிரவு வரை வெளியாகலாம். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையின் அதிகாரப்பூர்வ முடிவுகளும் தேர்தல் நடத்தும் அதிகாரியால் வெளியிடப்படும்.
வாக்கு எண்ணும் பணிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடவுள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு தேர்தல் பார்வையாளர், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்காணிப்பில் பணிகள் நடைபெறுகின்றன.
பாதுகாப்பு ஏற்பாடாக 70 கம்பெனி துணை ராணுவப்படையினர் உட்பட 18 ஆயிரம் போலீசார் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், அசம்பாவிதங்களை தடுக்க தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். 5.73 கோடி வாக்காளர்களில் 4.88 கோடி பேர் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் 85.10 சதவீத வாக்குப்பதிவு பதிவாகி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அடுத்த அரசை தீர்மானிக்கும் முக்கிய நாள் என்பதால் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.