தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து மே 4-ஆம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
எனினும், 28 தொகுதிகளில் போட்டியிடக் கூடிய காங்கிரஸ் வேட்பாளர்களை இறுதி செய்வதற்கான பணியில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இந்த சூழலில், தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களை இறுதி செய்ய காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ் கட்சி அகில இந்திய கட்சி என்பதால், வேட்பாளர்களை ஆய்வு செய்யும் பணி காரணமாகவே பட்டியலை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது 85 சதவீத வேட்பாளர்களை முடிவு செய்துள்ளோம். இன்றிரவு அல்லது நாளை காலை காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும்” என்று தெரிவித்தார்.