தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் வருகிற 23-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. இடம்பெற்றுள்ளது. இதுதவிர தி.மு.க. தலைமையில் கூட்டணி கட்சிகளும், நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சிகள் தனித்து தேர்தலை எதிர்கொள்கின்றன.
இதுவரை நாம் தமிழர் கட்சி, த.வெ.க. மற்றும் திமு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அந்தந்த கட்சிகள் தேர்தல் பரப்புரையை தொடங்கி விட்டன. அ.கி.மு.க. கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 27 தொகுதிகளுக்குமான பா.ஜ.க. வேட்பாளர்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இதனிடையே, சென்னையில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைமையகத்தில் பியூஷ் கோயல் தலைமையில் பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் தேர்வு தொடர்பான மையக்குழு கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய மந்திரி எல். முருகன், அண்ணாமலை, வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் 27 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்கள் யார்? என்பது குறித்த பட்டியல் குறித்து தீவிர ஆலோசனை நடைபெற்றது.
ஆலோசனைக்குப்பின் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "தொகுதிக்கு தலா 3 பேர் என்ற அடிப்படையில் 27 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்கிறோம். இது தொடர்பான உத்தேச பட்டியல் டெல்லி தலைமைக்கு அனுப்பப்படும். தகுதி வாய்ந்த வேட்பாளர்களை பா.ஜ.க. தலைமை முடிவு செய்யும். 27 தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படுவர்," என்றார்.