தமிழக செய்திகள்

யாருக்கும் தனிப்பெரும்பான்மை இல்லை: தொங்கு சட்டசபை அமைந்தால் என்னவாகும்?

தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கக் கூடிய அளவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு சட்டசபை அமையும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் முடிவு நேற்று வெளியானது. விஜயின் த.வெ.க. கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்று தனிக்கட்சியாக அதிக இடங்களை பிடித்துள்ளது. திமுக கூட்டணி கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

தேர்தலுக்கு முன்னதாக த.வெ.க. தலைவர் விஜய், தன்னுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணியிலும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கருத்து மேலோங்கியது.

இருந்தபோதிலும் விஜய் முதல் தடவையாக தேர்தலை சந்திக்கிறார். அவருடைய பலம் தெரியாமல் எப்படி? எனக் கூறி சிறிய கட்சிகள் அவருடன் கூட்டணி வைக்க தயங்கினர்.

ஆனால் மக்கள் தனக்கு ஆதரவாக உள்ளனர் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறி த.வெ.க. தனியாக களம் கண்டது. தேர்தலுக்கு முன்பு விஜய் குறிப்பிடத்தகுந்த வாக்குகளை பிரிப்பார் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன.

ஒருவேளை திமுக அல்லது அதிமுக ஆட்சியை பிடித்தாலும் தனி மெஜாரிட்டி (திமுக அல்லது அதிமுக தனித்து 118 இடங்களில் வெற்றி பெறாது) கிடைக்காது என்பது போன்ற பேச்சு எழுந்தது. ஆகவே, தேர்தலுக்கு பின்னர் சிறிய கட்சிகள் ஆட்சியில் பங்கு கேட்கலாம் என்ற நிலை உருவாகும் நிலை இருந்தது. இதனால் இரண்டு கட்சிகளும் சிறிய சிறிய கட்சிகளை தங்களுடைய சின்னத்தில் போட்டியிட வைத்தன.

ஆனால் தேர்தல் முடிவு வேறு மாதிரி அமைந்தது. த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, தவெக என யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

பொதுவாக இப்படிப்பட்ட சூழ்நிலையில் புதிய ஆட்சி அமைந்தால் அதை தொங்கு சட்டசபை என்று அழைப்பார்கள். தொங்கு சட்டசபை என்றால் தனக்கு ஆட்சி அமைப்பதற்கான தனி மெஜாரிட்டி இல்லாத நிலையில், மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது.

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் ஒன்றாக இருந்தபோது 1952-ல் தொங்கு சட்டசபை அமைந்தது. அதன்பின் 2006-ல் திமுக கூட்டணி அதிக இடங்களை பிடித்தாலும், திமுக தனியாக 118 இடங்களை பிடிக்கவில்லை. 90 அளவிலான இடங்களை பிடித்தது. இதனால் கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் கருணாநிதி ஆட்சி அமைத்தார்.

தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் கூட்டணி என்றுதான் கூட்டணி அமைக்கப்படும். ஆனால், கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவிப்பதால் தொங்கு சட்டசபை என அழைக்கப்படுவது இல்லை.

ஜெயலலிதா 2006 கருணாநிதி ஆட்சியை மைனாரிட்டி ஆட்சி என்றுதான் அழைப்பார். பல்வேறு மாநிலங்கள் இதுபோன்ற நிலையை சந்தித்துள்ளது. வாஜ்பாய் கூட 1996 தேர்தலில் இதுபோன்று சந்தித்துள்ளார்.

தற்போதைய நிலையில் விஜய் சிறிய கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க வேண்டும். இல்லை என்றால் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும்.

சிறிய கட்சிகளிடம் ஆதரவு கேட்கும்போது, அவர்கள் மந்திரி சபை உள்ளிட்டவைகளை கேட்க நேரிடும். இல்லையென்றால் வெளியில் இருந்து ஆதரவு தருவதாக தெரிவிப்பார்கள். மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டிய நிலையில் இவர்களது ஆதரவு கட்டாயாம்.

சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், மற்ற கட்சி எம்.எல்.ஏ.-க்கள் வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களிக்க வேண்டும். இதற்கு முறைமுக வேலைகள் செய்ய வேண்டும். 10 தொகுதிகள்தான் தேவை என்பதால் த.வெ.க. அதில் ஈடுபடுமா? எனத் தெரியவில்லை.

இந்த இரண்டு வாய்ப்பையும் தவற விட்டால் விஜய் முதல்வராக முடியாது. அடுத்து திமுக-வை ஆளுநர் அழைக்கலாம். அவர்களாலும் முடியவில்லை என்றால் தேர்தல் முடிவு ரத்து செய்யப்பட்டு ஜனாதிபதி ஆட்சி கொண்டு வரப்படும். பின்னர் புதிதாக தேர்தல் நடத்தப்படும்.