திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சீனிவாசன், நத்தம் தொகுதி வேட்பாளர் ரா.விசுவநாதன், வேடசந்தூர் வேட்பாளர் டாக்டர் பரமசிவம், நிலக்கோட்டை தேன்மொழி, பழனி ரவிமனோகரன், ஆத்தூர் விஸ்வநாதன் ஆகியோருக்கு இரட்டை இலை சின்னத்திலும், ஒட்டன்சத்திரம் த.மா.கா. வேட்பாளர் விடியல் சேகருக்கு தாமரை சின்னத்திலும் வாக்கு கேட்டு திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அ.தி.மு.க.வை எதிர்க்க தைரியம் இல்லாமல் இது தமிழகத்துக்கும், டெல்லிக்கும் இடையே தேர்தல் என பேசி வருகிறார். இது தி.மு.க. ஆட்சியை அகற்ற நடக்கும் தேர்தல் என்பது அவருக்கு தெரியவில்லை.
2 நாட்களுக்கு முன்பு வேட்பாளரை அறிமுகப்படுத்திவிட்டு எந்த சின்னம் என ஸ்டாலின் கேட்கிறார். அவர்களது உதயசூரியன் சின்னமே ஸ்டாலினுக்கு மறந்து விட்டது. மக்கள் அன்றாடம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
ஆனால் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் நடைபயிற்சி செய்வது, டீ குடிப்பது, பளு தூக்குவது போன்றவற்றை படம் பிடித்து ஸ்டாலின் போடுகிறார். மேலும் ஐ.பி.எல். கிரிக்கெட் பார்த்து அது குறித்து கருத்து தெரிவிக்கிறார். ரோம் நகரம் பற்றி எரிந்தபோது பிடில் வாசித்த கதைபோல மக்களைப் பற்றி சிந்திக்காமல் கிரிக்கெட் விளையாட்டை பார்க்கும் முதல்வர் நாட்டுக்கு தேவையா.
செல்வ செழிப்பில் வளர்ந்த ஸ்டாலினுக்கு எப்போதும் மக்களைப்பற்றி அக்கறை இருக்காது. ஏனென்றால் மக்களைப்பற்றி சிந்திக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க.தான். ஸ்டாலின் தனது குடும்பத்தை பற்றி மட்டுமே யோசிப்பார்.
மத்திய அரசு மும்மொழி கொள்கையை அமல்படுத்துவதை நான் எதிர்க்கவில்லை என்கிறார். மும்மொழி கொள்கையை முதன்முதலில் தமிழகத்துக்கு கொண்டு வந்தது காங்கிரஸ்தான். மொழி கொள்கையை எதிர்த்து போராட்டம் நடத்திய தி.மு.க.வுக்கு இதுகூட புரியவில்லை. ஆனால் தி.மு.க.வினரே தமிழகத்தில் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் பொங்கல் பரிசு தொகுப்பு தருவதாக கூறி தரமற்ற பொருட்களை வழங்கினார். திருவண்ணாமலை கோவிலில் மக்கள் பயன்படுத்த முடியாது என்று ஒதுக்கிய 2 டன் வெல்லத்தை பொங்கல் பரிசுத்தொகுப்பில் வழங்கியவர்தான் அவர். அதுமட்டுமல்ல கண்வலி கிழங்கு விவசாயி–களுக்கு உரிய தொகை கிடைக்காமல் சிண்டிகேட் அமைத்து அவர்களுக்கு உரிய லாபம் கிடைக்காமல் செய்தவர். இதுபோன்றவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர மக்கள் அனுமதிக்க கூடாது.
தற்போது தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரூ.8 ஆயிரம் கூப்பன் கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். தி.மு.க. கண்டிப்பாக ஆட்சிக்கு வராது. அவ்வாறு வந்துவிட்டால் அவர்கள் கொடுக்கும் கூப்பன் மூலம் பயன்பெறுவது தி.மு.க.வை சேர்ந்தவர்களே இருப்பார்கள். அதிலும் கமிஷன் பார்ப்பார்கள். மக்கள் நலனுக்காக அம்மா மினி கிளினிக், அம்மா உணவகம், குடிமராமத்து திட்டம் ஆகியவற்றை கொண்டு வந்தோம். ஆனால் இதனை தி.மு.க. அரசு முடக்கி விட்டது. விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கி மூலம் பயிர் கடனை 2 முறை தள்ளுபடி செய்த ஒரே அரசு அ.தி.மு.க. மட்டுமே.
தி.மு.க. ஆட்சியில் மின்கட்டணம் கடுமையாக உயர்ந்துவிட்டது. வீடுகளுக்கு முதலில் 52 சதவீதம் உயர்த்தினார்கள். ஆண்டுக்கு 5 சதவீதம் என மூன்றாண்டுகளில் 15சதவீதம் உயர்த்தி, இப்போது 67சதவீதமாக உயர்த்தி விட்டனர். கடைக்கு பீக் ஹவர் என்ற பெயரில் டபுள் சார்ஜ் வசூலிக்கிறார்கள். வீட்டுவரி 100 சதவீதம் உயர்ந்துவிட்டது, ஆண்டுக்கு 6சதவீதம் உயர்வு என்று இரண்டு வருடத்தில் 12 சதவீதம் ஏற்றிவிட்டனர். கடைக்கு வரி 150 சதவீதம் உயர்ந்துவிட்டது, கடைக்கும் ஆண்டுக்கு 6 சதவீதம் உயர்வு. போதாக்குறைக்கு குப்பைக்கும் வரி போட்டுவிட்டனர். மக்கள் மீது வரிச்சுமையை சுமத்திய அரசு தேவையா?
அ.தி.மு.க. ஆட்சியில் மாநகராட்சி பிளான் அப்ரூவலுக்கு ஆயிரம் சதுரடிக்கு 38 ஆயிரம் தான் கட்டணம். அதுவே தி.மு.க. ஆட்சியில் ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் கட்டணம். கட்டுமானப் பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது. கட்டுமானப் பொருட்கள் எம்சாண்ட் அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.3 ஆயிரம், தி.மு.க. ஆட்சியில் ரூ.6 ஆயிரம், ஒரு யூனிட் ஜல்லி அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.2 ஆயிரம், தி.மு.க. ஆட்சியில் ரூ.5,500. ஒரு டன் கம்பி அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.40 ஆயிரம், தி.மு.க. ஆட்சியில் 65 ஆயிரம், ஒரு செங்கல் அ.தி.மு.க. ஆட்சியில் 7-8 ரூபாய், இப்போது 12-14 ரூபாய். சிமெண்ட் ஒரு மூட்டை அ.தி.மு.க. ஆட்சியில் 240 ரூபாய், தி.மு.க. ஆட்சியில் 350 ரூபாய். மரம் ரூபாய் 200 தி.மு.க. ஆட்சியில் உயர்வு.
எப்படி வீடு கட்டமுடியும்? கட்டுமானப் பொருட்கள் விலை உயரும்போது அது அத்தியாவசிய பட்டியலில் சேர்க்கப்பட்டு கட்டுப்படுத்தப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. நானும் சட்டமன்றத்தில் இதுபற்றி கேட்டேன். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.
வருகிற தேர்தலில் அ.தி.மு.க. தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணியை மகத்தான் வெற்றி பெற வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.